நீட் தேர்வையும், EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பாக இன்று சென்னை வேப்பேரியில், இருசக்கர வாகன பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் இருந்து இருசக்கர வாகன பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் இப்பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பெரியார் திடலில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து இந்த பேரணியை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக திராவிடர் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. கடந்த 18ம் தேதியே அனுமதி கேட்டநிலையில், கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது;
“தந்தை பெரியாரைக் கொள்கைத் தலைவர் எனச் சொந்தம் கொண்டாடும் த.வெ.க. அரசு, பெரியார் திடலிலேயே போலிசாரைக் குவித்திருப்பது ஏன்?
திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணத்துக்குக் கடைசி நிமிடத்தில் அனுமதி மறுத்ததற்கு என்ன காரணம்? யாரின் அழுத்தத்துக்குப் பணிந்து இதைச் செய்கிறார்கள்?
கடந்த காலங்களில் மிக அமைதியான முறையில், அறவழியில், கண்ணியத்தோடு இதே போராட்டங்களைத் தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் கட்டுப்பாட்டுடன் நடத்திக் காட்டியிருக்கிறது.
அத்தகைய இயக்கத்தின் பரப்புரைப் பயணத்தைத் தடை செய்வது வன்மையான கண்டனத்துக்குரியது. சிவப்பும், மஞ்சளும் சேர்ந்தால் கிடைப்பது காவி என்பது இதன் மூலம் உறுதியாகிவிட்டது. அடக்குமுறை அரசியலைக் கைவிட்டு, கி.வீரமணியின் பரப்புரைப் பயணத்துக்கு உரிய அனுமதியைத் த.வெ.க. அரசு வழங்கிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.