தமிழக செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு - தனியார் வானிலை ஆய்வாளர்

அர்னாப் புயலானது இன்று அதிகாலை 2 மணி முதல் 8 மணி வரை இடைப்பட்ட நேரத்தில் ஆந்திரா மற்றும் ஏனாம் கடற்கரை பகுதிகளை கடந்தது.

அர்னாப் புயல்

மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய அர்னாப் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று மிக தீவிர புயலாக அதே பகுதிகளில் நிலவியது.

கரையை கடந்தது

இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை 2 மணியளவில் ஆந்திராவின் காக்கிநாடா மற்றும் புதுச்சேரியின் ஏனாம் கடற்கரை பகுதிகளில், கரையை கடக்க தொடங்கியது.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்

இதையடுத்து இன்று காலை 8 மணிக்கு ஆந்திரா- ஏனாம் கடற்கரை பகுதிகளை அர்னாப் புயல் கடந்தது.

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் வி.ஆர்.துரை கூறியதாவது:-

மிகத் தீவிர புயலான அர்னாப் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி தீவிர புயலாக வலுவிழந்துள்ளது. இந்த புயலானது இன்று அதிகாலை 2 மணி முதல் 8 மணி வரை இடைப்பட்ட நேரத்தில் ஆந்திரா மற்றும் ஏனாம் கடற்கரை பகுதிகளை கடந்தது.

இது நர்சாபூருக்கு கிழக்கு- வடகிழக்கே சுமார் 20 கி.மீ. தொலைவிலும், ஏனாமிற்கு தென்மேற்கே 40 கி.மீ. தொலைவிலும் காக்கி நாடாவிற்கு தென்மேற்கே 60 கி.மீ. தொலைவிலும் கரையை அடைந்தது.

அப்போது காற்றின் வேகம் மணிக்கு 125-135 கி.மீ. வேகத்திலும் அவ்வப்போது 150 கி.மீ. வேகத்திலும் வீசியது.

தற்போதைய நிலவரப்படி புயலின் மையப் பகுதி முழுமையாக நிலப்பகுதிக்குள் நுழைந்து விட்டதால் கரையை அடையும் செயல் முறை நிறைவடைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

மேலும் இது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் கூறுகையில், “அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி மேலும் வலுவடைந்து மேற்கு-வடமேற்கு திசையில் வடதமிழகம்-தெற்கு ஆந்திரா நோக்கி நகரக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் 2-ம் சுற்று வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந்தேதி முதல் தொடங்கும்” என்றார்.

SCROLL FOR NEXT