தமிழக செய்திகள்

'என் இனிய பொன்நிலாவே' பாடல் வழக்கு- மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்

காப்பிரைட் சட்டத்தின் 2(பி) பிரிவின்படி, இசைப்பணி என்பதில் பாடல் வரியோ அல்லது ஒலிப்பதிவோ வராது. அதில், ஒரு பாடலின் இசைக்கோர்வை மட்டுமே அடங்கும்.

'மூடுபனி' என்ற தமிழ்ப்படத்தில் இடம்பெற்ற 'என் இனிய பொன்நிலாவே' என்ற பாடல், 'அகத்தியா' என்ற புதிய தமிழ்ப்படத்தில் மறுஉருவாக்கம் செய்யப்பட்டது.

அதை எதிர்த்து சரிகம இண்டியா லிமிடெட் நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த பாடலின் காப்பிரைட் உரிமை தங்களிடம் இருப்பதாக தெரிவித்தது. ஆனால், அகத்தியா படத்தயாரிப்பு நிறுவனம். தாங்கள் பாடலின் இசையமைப்பாளரான இளையராஜாவிடம் உரிமம் பெற்றிருப்பதாக தெரிவித்தது.

இளையராஜாவும் 'காப்பிரைட்' சட்டப்படி தனக்கு உரிமம் வழங்க அதிகாரம் இருப்பதாக கூறினார்.

ஆனால் அவரது வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி மினி புஷ்கர்ணா, பாடலின் ஒலிப்பதிவின் ஒரு அங்கமான பாடல் வரிகளுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது என்று அவரது மனுவை தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் இளையராஜா மேல்முறையீடு செய்தார்.

அந்த மனு, நீதிபதிகள் ஹரிசங்கர், ஓம்பிரகாஷ் சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இளையராஜாவின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். நீதிபதிகள் கூறியதாவது:-

காப்பிரைட் சட்டத்தின் 2(பி) பிரிவின்படி, இசைப்பணி என்பதில் பாடல் வரியோ அல்லது ஒலிப்பதிவோ வராது. அதில், ஒரு பாடலின் இசைக்கோர்வை மட்டுமே அடங்கும்.

எனவே, என் இனிய பொன்நிலாவே பாடலின் இசையமைப்பாளரான இளையராஜா, அந்த பாடலின் ஒலிப்பதிவுக்கோ, பாடல் வரிகளுக்கோ உரிமை கோர முடியாது. 'மூடுபனி' படத்தின் காப்பிரைட் உரிமை, அதன் தயாரிப்பாளரிடம் உள்ளது. அவர் முறையாக 'சரிகம' நிறுவனத்துக்கு உரிமை அளித்துள்ளார்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.