ஆ. ராசா- முதலமைச்சர் விஜய்
தமிழக செய்திகள்

முதலமைச்சர் விஜய்க்கு எதிராக அவதூறு பேச்சு: ஆ. ராசா மீது எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

அண்ணாவும், ராஜாஜியும் இருந்த சட்டப்பேரவையில், இன்று நா*ரி தலைவர்கள் எல்லாம் முதலமைச்சராக உள்ளனர் என்று ஆ.ராசா பேசியிருந்தார்.

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான த.வெ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ், விசிக, இடது சாரிகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்து விஜய் முதல்வராக பதவி ஏற்றுள்ளார். சட்டசபையில் முதலமைச்சர் விஜய், சொன்ன அப்பாவை காணோம் குட்டிக்கதை திமுக-வினரை கடுங்கோபத்திற்கு உள்ளாக்கியது.

தங்களுடன் கூட்டணி அமைத்த கட்சிகள் த.வெ.க.-வுக்கு ஆதரவு அளித்ததால் தி.மு.க. கட்சியின் த.வெ.க. முதல்வர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், நீலகிரி மக்களவை எம்.பி.யுமான ஆ. ராசா கடந்த மாதம் திருவாரூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ராஜாஜி, அண்ணா போன்றோர் அலங்கரித்த முதலமைச்சர் பதவியில் இன்று.., என முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையில் பேசினார்.

ஆ.ராசாவின் பேச்சு அப்போது பேசும்பொருளானது. இந்த நிலையில் அம்மாபாளையம் அரசு மருத்துவமனை மருத்துவர் ராசா மணிகண்டன் என்பவர் ஆ. ராசாவுக்கு எதிராக எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் ஆ.ராசாவின் பேச்சு சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆ.ராசா பேசியது என்ன?

திருவாரூர் கலைஞர் கோட்டத்தில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின், டிஆர் பாலு, கே.என்.நேரு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன், முன்னாள் அமைச்சர், பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா, "காமராஜரை தோற்கடித்த விருதுநகர் பெ.சீனிவாசன் அண்ணாவும், ராஜாஜியும் எவ்வளவு பெரிய அறிஞர்கள் என்பதை குறிப்பிடும்போது, "நான் காமராஜரை தோற்கடித்துவிட்டேன், காமராஜரை தோற்கடித்ததற்கு ஒரு பாராட்டு விழா உள்ளது வருகிறீர்களா?" என்று கேட்டாராம்.

அதற்கு அண்ணா, "வின்சென்ட் சர்ச்சிலையும், ரூல்ஸ்வெல்டையும் தெரியுமா என்றார். இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்தை மட்டுமல்ல ஐரோப்பியாவை மட்டுமல்ல, இந்த உலகப் பந்தை காப்பாற்றியதில் வின்சென்ட் சர்ச்சிலுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு, அந்த வின்சென்ட் சர்ச்சில் போருக்கு பிறகு பொதுத் தேர்தலில் தோற்றுப் போனார்.

வெற்றி பெற்ற இங்கிலாந்து பிரதமரிடம் வின்சென்ட் சர்ச்சிலேயே தோற்கடித்து விட்டீர்களே என்று கேட்டனர். அதற்கு அவர், உலகத் தலைவராக இருக்கின்ற வின்சென்ட் சர்ச்சிலை ஒரு தோல்வி பாதிக்காது" என்று கூறினாராம்.

பின்னர் ராஜாஜியிடம் கேட்டபோது, மகாத்மா காந்தியையே இரண்டு இன்ச் உயரம் உள்ள தோட்டா தான் தொலைத்தது. அதற்காக அந்த தோட்டாவுக்கு பாராட்டு விழா நடத்த முடியுமா? என்ன முட்டாள்தன" என்று கூறினாராம்.

அண்ணாவும், ராஜாஜியும் இருந்த சட்டப்பேரவையில், இன்று நா*ரி தலைவர்கள் எல்லாம் முதலமைச்சராக உள்ளனர். இந்தத் தலைவனை ஒரு தேர்தலை வைத்து எடை போட முடியுமா? இந்த மேடையில் உள்ள முத்தரசன் மன்னிக்க வேண்டும். இன்னொரு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் திமுக கூட்டணியே இல்லை என்கிறார். அதைச் சொல்ல அவர் யார்? அவருக்கு என்ன அதிகாரம் உள்ளது? எங்கள் கட்சி திமுக கூட்டணியில் இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். அவருடைய பேச்சு அதிகப் பிரசங்கித்தனம். எங்களது கூட்டணியில் 60 இயக்கங்கள் உள்ளன.