தமிழக செய்திகள்

தீபாவளி: முட்டையிடும் வாத்து-தோகை விரிக்கும் மயில்... கோவையில் குவிந்துள்ள புது பட்டாசு ரகங்கள்

பட்டாசு கடை வைப்பதற்கு மாநகர போலீசார் மற்றும் தீயணைப்பு துறை சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பற்ற வைத்தால் முட்டை போடும் வாத்து வெடி, ரூபாய் நோட்டு வெடி, பற்ற வைத்தால் மயில் தோகை தெரியும் வெடி உள்ளிட்ட பல்வேறு வகையான வெடிகள் விற்பனைக்கு வந்துள்ளன.

கோவை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை வருகிற 8 -ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஜவுளி விற்பனை சூடு பிடித்துள்ளது. மேலும் பல்வேறு கடைகளில் இனிப்புகள் விற்பனைக்காக மொத்தமாக ஆர்டர்களை பெற்று இனிப்புகள் செய்து கொடுக்கப்படும் என்று அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆர்டர்கள்

இவை தவிர குடிசை தொழில் மற்றும் வீட்டிலிருந்து இணைப்புகள் செய்து சிறிய அளவில் விற்பனை செய்யும் பெண்களும் தீபாவளி இனிப்பு விற்பனை ஆர்டர்களை பெற்று தயார் செய்து வருகிறார்கள்.

அதேபோன்று தீபாவளி என்றாலே பட்டாசை ஞாபகப்படுத்தும் என்பதால் பட்டாசு கடைகளும் அதிகம் முளைத்துவிட்டன. கோவை மாநகரில் லைசென்ஸ் பெற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

விற்பனை

இந்த கடைகள் நேற்று முதல் செயல்பட தொடங்கி உள்ளன. அவிநாசி ரோடு, திருச்சி ரோடு, சத்தி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, பொள்ளாச்சி ரோடு மற்றும் நகரின் உட்புற பகுதிகள் உள்ளிட்ட பல பகுதிகளில் உரிமம் பெற்ற பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பட்டாசுகள்

இதனால் சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் கடைகளுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு மட்டும் 50-க்கும் மேற்பட்ட வகையான பட்டாசுகள் வந்துள்ளன. இளைஞர்களுக்காக 100-க்கும் மேற்பட்ட பட்டாசு வகைகள் வந்துள்ளன.

வகை வகையான வெடிகள்

பற்ற வைத்தால் முட்டை போடும் வாத்து வெடி, ஏ.கே. 47 துப்பாக்கியில் இருந்து வெளியேறும் நெருப்பு, ரூபாய் நோட்டு வெடி, பற்ற வைத்தால் மயில் தோகை தெரியும் வெடி உள்ளிட்ட பல்வேறு வகையான வெடிகள் விற்பனைக்கு வந்துள்ளன.

பட்டாசு கடை வைப்பதற்கு மாநகர போலீசார் மற்றும் தீயணைப்பு துறை சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த கட்டுப்பாடுகளின்படி இந்த கடைகள் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கடைபிடித்து செயல்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது முதல் பட்டாசுகளை பொதுமக்கள் வாங்க கடைகளில் குவிந்து வருகிறார்கள். ஜவுளி, இனிப்பு கடைகளை போல பட்டாசு கடைகளிலும் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT