தமிழக செய்திகள்

நாளை மறுநாள் தீபாவளி கொண்டாட்டம் - கடை வீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

சென்னை தீவு திடலில் அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளுக்கு மக்கள் ஆர்வமுடன் சென்று பட்டாசுகளை வாங்கி வருகிறார்கள்.

நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் முந்தைய நாளான நாளை மாலையிலும் இன்று மாலையிலும் அதிகளவில் சென்னையில் பொதுமக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகை

தமிழகத்தில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வரும் நிலையில் அதற்கு மறுநாள் (திங்கட்கிழமை) அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்கள் சொந்த ஊர்களில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக மக்கள் படையெடுத்து வருகிறார்கள்.

கடைவீதிகளில் மக்கள் கூட்டம்

அதே நேரத்தில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடைவீதிகளில் தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் புத்தாடைகள் வாங்குவதற்காக மக்கள் அலைமோதி வருகிறார்கள்.

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, பாரிமுனை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மாலை நேரங்களில் மக்கள் அதிக அளவில் கூடி தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குகிறார்கள்.

குறிப்பாக நேற்று முதல் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் வியாபாரம் ‘களை’ கட்டியுள்ளது.

திருச்சி, மதுரை, கோவை, சேலம், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி என அனைத்து மாவட்டங்களிலும் ஜவுளிக்கடைகள் மளிகை நிறுவனங்கள் ஆகியவற்றில் கட்டுக்கடங்காத வகையில் பொதுமக்கள் கூடி தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கிறார்கள்.

பட்டாசு விற்பனை

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் கடை வீதிகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புத்தாடைகள் வாங்குவது போல தமிழகம் முழுவதும் பட்டாசு கடைகளிலும் கூட்டம் அதிகமாகவே இருந்து வருகிறது.

சென்னை தீவு திடலில் அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளுக்கு மக்கள் ஆர்வமுடன் சென்று பட்டாசுகளை வாங்கி வருகிறார்கள்.

பாதுகாப்பு விழிப்புணர்வு

குழந்தைகளை கவர்ந்த வகையில் இந்த ஆண்டு விதவிதமான பட்டாசுகளும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள அனைத்து பட்டாசுகளையும் குழந்தைகள் மிகுந்த உற்சாகத்தோடு கேட்டு வாங்குகிறார்கள்.

சென்னையில் தி.நகர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை போலீசார் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

ஒலிபெருக்கி மூலமாக உங்களது பொருட்களை பத்திரமாக பாதுகாத்து கொள்ளுங்கள், குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள், பிக் பாக்கெட் திருடர்கள் உங்கள் அருகிலேயே இருக்கலாம் என்பது போன்ற விழிப்புணர்வு வாசகங்களை தொடர்ச்சியாக ஒலிப்பெருக்கியில் எச்சரிக்கை விடுத்துக் கொண்டே இருக்கின்றனர்.

உச்சகட்ட பாதுகாப்பு

நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் முந்தைய நாளான நாளை மாலையிலும் இன்று மாலையிலும் அதிகளவில் சென்னையில் பொதுமக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு வணிகப் பகுதிகள் அனைத்திலும் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்கு போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதன்படி சென்னையில் உள்ள அனைத்து கடை வீதிகளிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

போக்குவரத்து போலீசார்

சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், செங்குன்றம் உள்ளிட்ட இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆவடி, தாம்பரம் கமிஷனர் அலுவலகத்திற்குட்பட்ட அதிகாரிகளும் சென்னை மாநகர போலீஸ் அதிகாரிகளும் தீபாவளி பாதுகாப்பை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். கடை வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் தேவையான ஏற்பாடுகளை போக்குவரத்து போலீசாரும் மேற்கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT