தமிழக செய்திகள்

தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம் சரிவு - அதிர்ச்சி தரும் புள்ளிவிவரம்

தமிழ்நாட்டில் மட்டும் விவசாயத்திற்காக சுமார் 21 லட்சம் ஆழ்துளை கிணறுகள் பயன்படுத்தப்படுகின்றன.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் நடப்பாண்டில் நிலத்தடி நீர் மட்டம் சரிந்து இருக்கிறது. அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தில் 6.77 மீட்டர் குறைந்துள்ளது.

நிலத்தடி நீர்

“நீர் இன்றி அமையாது உலகு" என்பது வள்ளுவனின் வாக்கு. தமிழ்நாட்டின் விவசாயத்திற்கும், குடிநீருக்கும், தொழில்வளத்திற்கும் ஆதாரமாக விளங்கும் நிலத்தடி நீர் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக வேகமாக அடிமட்டத்தை நோக்கி சரிந்து கொண்டிருக்கிறது.

இயற்கையின் கொடையை நாம் அளவுக்கு அதிகமாக சுரண்டியதன் விளைவாக, பல மாவட்டங்கள் 'சிவப்பு மண்டலங்களாக மாறி வருகின்றன. பூமிக்கு அடியில் வற்றி வரும் இந்த நீர்மட்டம். வெறும் சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல. அது நமது எதிர்கால வாழ்வாதாரத்திற்கான ஒரு அபாய எச்சரிக்கை மணியாகவே பார்க்க வேண்டும். அந்த வகையில் தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மட்டம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சரிவை சந்தித்து இருக்கும் அதிர்ச்சி தகவல் மாநில நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீர் வள தரவு மையம் புள்ளிவிவரங்களில் வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது.

ஜூன் மாதம்

தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒவ்வொரு மாதமும் நிலத்தடி நீர் மட்டம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை கணக்கிட்டு அதனை புள்ளிவிவரங்களாக இந்த மையம் வெளியிடுகிறது. அதன்படி, கடந்த ஜூன் மாதத்துக்கான புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. நிலத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் நீர் இருக்கிறது? என்பதை இந்த புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் சராசரியாக 28.74 மீட்டரில் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக கோவையில் 20.89 மீட்டர், கடலூரில் 19.03 மீட்டர், நாமக்கல்லில் 17.39 மீட்டர், புதுக்கோட்டையில் 16.60 மீட்டர், ஈரோட்டில் 15.52 மீட்டர். கரூரில் 13.52 மீட்டர், தஞ்சாவூரில் 12.61 மீட்டர், திண்டுக்கல்லில் 12.13 மீட்டரில் சராசரியாக நிலத்தடி நீர் இருக்கிறது.

சரிவு

இதில், கடந்த ஆண்டு (2025) ஜூன் மாதத்துடன், நடப்பாண்டு ஜூன் மாதத்தை ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் வேலூர், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் சராசரி நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக சரிந்துள்ளதை பார்க்க முடிகிறது. அதில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 5.36 மீட்டரில் இருந்த நிலத்தடி நீர் மட்டம், நடப்பாண்டு ஜூன் மாதத்தில் 12.13 மீட்டருக்கு சென்றுவிட்டது. அதாவது கடந்த ஆண்டைவிட 6.77 மீட்டர் ஆழத்துக்கு நிலத்தடி நீர் சென்றிருக்கிறது.

தர்மபுரியில் 5.55 மீட்டர், கரூரில் 5.42 மீட்டர், நாமக்கல்லில் 5.26 மீட்டர், கோவையில் 4.81 மீட்டர், ஈரோட்டில் 4.24 மீட்டர், திருவண்ணாமலையில் 3.15 மீட்டர், சேலத்தில் 3.07 மீட்டர், திருப்பூரில் 2.50 மீட்டர், திருச்சியில் 2.49 மீட்டர், கள்ளக்குறிச்சியில் 2.41 மீட்டர் நிலத்தடி நீர் சரிந்துள்ளது. இதேபோல் பிற மாவட்டங்களிலும் நீர் மட்டம் சற்று குறைந்திருக்கிறது.

நீர்மேலாண்மைத் திட்டங்கள்

தமிழ்நாட்டில் மட்டும் விவசாயத்திற்காக சுமார் 21 லட்சம் ஆழ்துளை கிணறுகள் பயன்படுத்தப்படுகின்றன. மழைநீர் பூமிக்குள் ஊறும் வேகத்தைவிட, 8 மடங்கு அதிவேகமாக நாம் தண்ணீரை வெளியே உறிஞ்சி எடுக்கிறோம். இதுவே நீர்மட்டம் பாதாளத்திற்கு செல்ல முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் "இயற்கை ரீசார்ஜ்" மையங்களான ஏரிகள், குளங்கள் போன்ற பாரம்பரிய நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்களாகவும், விளைநிலங்களாகவும் மாறிவிட்டன. இதனால் மழை பெய்தாலும் நீர் பூமிக்குள் இறங்க வழியில்லாமல் போய் இருக்கிறது.

எனவே அரசு கொண்டுவரும் நீர்மேலாண்மைத் திட்டங்களோடு. ஒவ்வொரு தனிமனிதனும் மழைநீர் சேகரிப்பை ஒரு கடமையாக மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையெனில், வருங்கால தலைமுறைக்கு நாம் விட்டுச்செல்லப் போவது வெறும் வறண்ட பூமியையும், கண்ணீரையும் மட்டுமே என்பதை நாம் நினைவில் கொள்வது அவசியமான ஒன்று.