தமிழக செய்திகள்

திருச்சி செவிலிய மாணவி உயிரிழப்பு: விசாரணைக்குழு அமைத்தது தமிழக சுகாதாரத்துறை

போராட்டத்தில் ஈடுட்ட செவிலியர் மாணவிகளிடம் அமைச்சர் ரமேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார்.

திருச்சி அரசு மருத்துவ மருத்துவமனையில் புதுக்கோட்டைய சேர்ந்த பயிற்சி செவிலிய மாணவி சீதாலட்சுமி, மூக்கு வலி என அனுமதிக்கப்பட்ட நிலையில், தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக சக மாணவிகள் புகார் எழுப்பியுள்ளனர்.

தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி செவிலியர்கள் காலை முதலே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகளவில் மயக்க மருத்து கொடுத்ததால்தான் மாணவி இறந்ததாக, சக மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுட்ட செவிலியர் மாணவிகளிடம் அமைச்சர் ரமேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, செவிலிய மாணவி மரணம் தொடர்பாக சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் ரமேஷ் செவிலிய மாணவிகளிடம் உறுதி அளித்தார்.

மேலும் அவர்," திருச்சி அரசு மருத்துவமனையில் மாணவிக்கு அளித்த சிகிச்சையில் தவறு நடந்து இருந்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். மாணவிகளின் புகார்களை எழுதி வாங்கி இருக்கிறோம். தற்காலிக நடவடிக்கைக்கு பிரந்துறை செய்யப்படும்" என்றார்.

பின்னர், அமைச்சர் ரமேஷ் கொடுத்த வாக்குறுதியை ஏற்று சாலை மறியலில் ஈடுபட்ட செவிலிய மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலிய மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தமிழக சுகாதாரத்துறை விசாரணைக்குழு அமைத்துள்ளது. புகார் குறித்து விசாரிக்க மருத்துவர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையில் 3 மருத்துவர்கள் அடங்கிய குழு நியமனம் செய்யப்பட்டுள்ளன.