ஜெம் வீரமணி 
தமிழக செய்திகள்

ஜெம் வீரமணியின் பாலியல் துன்புறுத்தலால் மரணம்- 10 ஆண்டுகளுக்கு பிறகு தீவிரமடையும் ஐஸ் அவுஸ் சிறுமி தற்கொலை வழக்கு

வீரமணி, ஏழை - எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்வதாக கூறி எங்கள் மகளின் படிப்புச் செலவை அவர் ஏற்றுக்கொள்வதாகக் ஒரு தனியார் பள்ளியில் சேர்த்து விட்டார்.

சென்னை ஐஸ் அவுஸ் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் 2016ல் தற்கொலை செய்த வழக்கு, தொழிலதிபர் ஜெம் வீரமணியின் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுடன் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஜல்லிக்கட்டு கலவரத்தில் காவல் நிலைய ஆவணங்கள் எரிந்ததால் வழக்கு நின்றது. தற்போது சிறப்பு புலனாய்வு குழு இணைய ஆவணங்களை மீட்டெடுத்து, புதிய வழக்காக பதிவு செய்யத் தயாராகிறது.

பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் அவரது தோழி சாந்தி மற்றும் அவரது கணவர் மற்றும் வீரமணியின் முன்னாள் ஊழியர் கணேசன் ஆகியோரும் கைதாகி சிறையில் உள்ளனர்.

சாந்தியிடம் போலீஸ் காவலில் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்கொலை

இந்த நிலையில் தொழிலதிபர் வீரமணியின் பாலியல் துன்புறுத்தல் காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை ஐஸ் அவுஸ் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் 10 ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் விசாரணை தீவிரபடுத்தப்பட்டு உள்ளது.

வீரமணி, ஏழை - எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்வதாக கூறி எங்கள் மகளின் படிப்புச் செலவை அவர் ஏற்றுக்கொள்வதாகக் ஒரு தனியார் பள்ளியில் சேர்த்து விட்டார். எங்கள் மகள் பிளஸ் 2 படித்தபோது, எங்கள் மகளை வீரமணி பாலியல் வன்கொடுமை செய்தார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான மகள் தற்கொலை செய்து கொண்டதாக மாணவியின் தாய் புகார் அளித்திருக்கிறார்.

ஆவணங்கள்

இது தொடர்பாக 10 ஆண்டுகளுக்கு முன்பே வீரமணி மீது ஐஸ் அவுஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருந்த போதிலும் 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில் ஐஸ் அவுஸ் காவல் நிலையம் தீவைக்கப்பட்டு எரிக்கப்பட்டது. இதில் மாணவியின் தாய் அளித்த புகார் மற்றும் ஆவணங்கள் எரிந்து விட்டது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் தான் வீரமணி பாலியல் வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். அவர்கள் ஐஸ் அவுஸ் பக்கம் திரும்பி தற்கொலை செய்த வழக்கையும் தூசு தட்டி உள்ளனர்.

அது தொடர்பான ஆவணங்களை இணையதளத்தில் இருந்து எடுத்து அடுத்த கட்ட விசாரணையை சிறப்பு புலனாய்வு குழுவினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

இதன் முடிவில் சிறுமிக்கு ஆபாச தொல்லை கொடுத்தது மற்றும் அவர் தற்கொலைக்கு தூண்டியது ஆகிய பிரிவின் கீழ் வீரமணி மீது புதிய வழக்கு பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கைது நடவடிக்கை

அதுபோன்று ஆதாரங்களை திரட்டி சிறுமி பாலியல் மற்றும் தற்கொலை வழக்கில் வீரமணியின் பெயரை சேர்த்து இந்த வழக்கிலும் அவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீரமணி மீது இதுவரை பத்துக்கும் மேற்பட்ட சிறுமிகள் பாலியல் புகார் தெரிவித்து இருப்பதாக கூறப்படும் நிலையில் அது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிறப்பு புலனாய்வு குழுவினர் திரட்டி வருகிறார்கள்.

6 மாதத்துக்குள்

இதன்மூலம் போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு விசாரணையை விரைவாக முடித்து வீரமணிக்கு கடும் தண்டனை வாங்கிக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.

இது போன்ற வழக்குகளை பொறுத்தவரையில் ஆறு மாதத்தில் வழக்கு விசாரணையை முடித்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு போலீசார் இதற்கு முன்பு தண்டனை வாங்கி கொடுத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் வீரமணி வழக்கையும் விரைவாக முடித்து ஆறு மாத காலத்துக்குள் அவருக்கு சிறை தண்டனை வாங்கிக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் உயர் அதிகாரிகள் மேற்பார்வையில் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

அதே நேரத்தில் சிறுமிகள் தொடர்பான பாலியல் வழக்கு என்பதால் இந்த வழக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் போலீசார் மிகவும் ரகசியமாகவே வைத்து அடுத்தடுத்த விசாரணையை முடுக்கி விட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT