கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வாடமங்கலம் ஏரியில் டன் கனக்கில் மீன்கள் செத்து மிதப்பதால் அப்பகுதியில் கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
வாடமங்கலம் கிராமத்தில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் இந்த ஏரி அமைந்துள்ளது. இங்கு கட்லா, ரோகு, சப்பாரை, விரால் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் வளர்க்கப்பட்டு, வணிக ரீதியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த சில நாட்களாக ஏரிக்கரை ஓரங்களில் ஏராளமான மீன்கள் திடீரென செத்து மிதக்கத் தொடங்கியுள்ளன. அவை அழுகி வருவதால், அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கிராம மக்கள் வீட்டில் நிம்மதியாக உணவருந்த கூட முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஏரியில் செத்துக் கிடக்கும் மீன்களைக் காகம், பருந்து உள்ளிட்ட பறவைகள் கொத்திச் செல்கின்றன. அவற்றை அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளின் வீட்டின் கூரைகள் மொட்டை மாடிகள் திறந்தவெளி தண்ணீர் தொட்டிகள் ஆகியவற்றில் போட்டு விடுகின்றன. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்குப் பல்வேறு தொற்று நோய்கள் பரவும் பேராபத்து உருவாகியுள்ளது. இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏரியில் செத்து மிதக்கும் மீன்களை உடனடியாக அப்புறப்படுத்தி, கிராமத்தின் சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும். மீன்வளத்துறை அதிகாரிகள் ஏரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும். மீன்கள் கடுமையான கோடை வெப்பத்தால் இறந்தனவா? அல்லது ஏரி நீரில் ஏதேனும் நச்சு கலக்கப்பட்டுள்ளதா? என்பதைப் பரிசோதனை மூலம் கண்டறிய வேண்டும்.
பொதுமக்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகமும் மீன்வளத்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.