பிரேமலதா, ஜி.கே. வாசன் பிரேமலதா, ஜி.கே. வாசன்
தமிழக செய்திகள்

மழையால் நனைந்து சேதம்: நெல் உற்பத்திக்கு ஏற்ப சேமிப்பு கிடங்குகளை உருவாக்காதது ஏன்?- பிரேமலதா, ஜி.கே.வாசன் கேள்வி

மழையால் நனைந்து சேதம் நெல் உற்பத்திக்கு ஏற்ப சேமிப்பு கிடங்குகளை உருவாக்காதது ஏன்? என்று பிரேமலதா, ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதுகுறித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:-

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள 25 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளது விவசாயிகளிடையே மிகுந்த வருத்ததை ஏற்படுத்தி உள்ளது.

விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் நெல்மணிகள் முறையான சேமிப்பு கிடங்குகள் இல்லாமல் வீணாகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விவசாய பருவத்திற்கும் எவ்வளவு டன் நெல் விளையும் என்று தெரியும். ஆனால் உற்பத்திக்கு ஏற்ப அவற்றை சேமிக்க தேவையான சேமிப்பு கிடங்குகளை அரசு உருவாக்காமல் இருப்பது ஏன்?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களுக்கானதாக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் அரசுகள் செய்த தவறை தற்பொழுதுள்ள த.வெ.க அரசும் தொடரக்கூடாது. நாட்டிற்கே சோறுபோடும் விவசாயிகளின் நலனில் அக்கறையோடு செயல்பட வேண்டும். ஒவ்வொரு வட்டாரத்திற்கும் அங்கு உற்பத்தியாகும் விளை பொருட்களுக்கு ஏற்ப பாது காப்பான சேமிப்பு கிடங்குகளை உருவாக்க வேண்டும்.

பிரேமலதா

தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக திடீர் கனமழை பரவலாகப் பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து கமையான சேதத்திற்கு உள்ளாகி உள்ளன.

இந்த நிலைமை விவசாயிகள் மத்தியில் கடும் வேதனையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே திறந்த வெளியில் வைக்கப்பட்டு உள்ள நெல் மூட்டைகளை போர்க்கால அடிப்படையில் பாதுகாப்பான கிடங்குகள் மற்றும் சேமிப்பு மையங்களுக்கு உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் உழைப்பையும் விளை பொருட்களையும் பாதுகாக்க அரசு உடனடி மற்றும் நிரந்தர தீர்வுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.