சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் தொலைதூர புயலை எச்சரிக்கும் வகையில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 19-ந்தேதி மாலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 20-ந்தேதி கிழக்கு மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்தது.
இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 18 கி.மீ வேகத்தில் மேற்கு திசையில் நகர்ந்து, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 08:30 மணி நிலவரப்படி அதே பகுதியில் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் ‘ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக’ வலுவடைய அதிக வாய்ப்புள்ளது.
தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் இது நாளை இரவு முதல் நாளை மறுநாள் அதிகாலைக்குள் விசாகப்பட்டினம் மற்றும் கோபால்பூர் இடையே வடக்கு ஆந்திரப் பிரதேசம் - தெற்கு ஒடிசா கடற்கரை பகுதியை நெருங்கும்.
இது மேலும் தீவிரமடைந்து புயலாக மாறினால், இதற்கு ‘அர்னாப் என பெயரிடப்பட வாய்ப்புள்ளது. எனினும் இந்த அமைப்பு தற்போதைக்கு தீவிரப் புயலாக மாறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது இன்று மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், ஏனைய இடங்களில் லேசான மழையும் பெய்யும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 55 முதல் 65 கி.மீ வரை வீசக்கூடும், கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால், மறு அறிவிப்பு வரும் வரை ஆழ்கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை துறை அறிவுறுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் தொலைதூர புயலை எச்சரிக்கும் வகையில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது.
காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் தங்களுடைய படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்கவும் கடற்கரை ஓரங்களில் உள்ள மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கவும் மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.