தமிழக செய்திகள்

பாம்பனில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்- மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

வடமேற்கு வங்காள விரிகுடாப் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப் பெற அதிக வாய்ப்புள்ளது.

பாம்பனில் உள்ள தமிழ்நாடு கடல்சார் வாரிய துறைமுக அலுவலகத்தில் தொலைதூர புயலை எச்சரிக்கும் வகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 19-ந்தேதி மாலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 20-ந்தேதி கிழக்கு மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்தது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்

தற்போது அந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று நேற்று கிழக்கு மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இன்று மேற்கு மத்திய வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப் பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விசாகப்பட்டினம்

மேலும் வடமேற்கு வங்காள விரிகுடாப் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப் பெற அதிக வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற நாளை (23-ந்தேதி) இரவு முதல் 24-ந்தேதி அதிகாலை வரை விசாகப்பட்டினம் மற்றும் கோபால்பூர் இடையே வடக்கு ஆந்திரப்பிரதேசம்-தெற்கு ஒடிசா கடற்கரைகளை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகக் கடக்க அதிக வாய்ப்புள்ளது.

பலத்த மழை

இதன் எதிரொலியாக நேற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது இன்று மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், ஏனைய இடங்களில் லேசான மழையும் பெய்யும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 55 முதல் 65 கி.மீ வரை வீசக்கூடும், கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால், மறு அறிவிப்பு வரும் வரை ஆழ்கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை துறை அறிவுறுத்தியுள்ளது.

புயல்

அதன்படி, பாம்பனில் உள்ள தமிழ்நாடு கடல்சார் வாரிய துறைமுக அலுவலகத்தில் தொலைதூர புயலை எச்சரிக்கும் வகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் தங்களுடைய படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்கவும் கடற்கரை ஓரங்களில் உள்ள மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கவும் மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

மீனவர்கள்

இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக பல கோடி அளவில் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மீனவர்களும் வேலையிழந்து உள்ளனர்.

SCROLL FOR NEXT