தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை மறுநாள் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு மாதம் நெருங்கி வருகின்ற நிலையில் எதிர்பார்த்த அளவிற்கு மழை பொழிவு இல்லை.
வங்கக்கடலில் உருவான 2 புயல்கள் காரணமாக சென்னை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்தது. பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யாததால் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில் மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. அதுபோல தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து சென்னை மண்டல வானிலை இயக்குனர் துரை கூறியதாவது:-
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை மறுநாள் (13-ந்தேதி) ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும்.
இது தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக படிப்படியாக வலு பெறக் கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடலோர பகுதிகளை நோக்கி வருவதற்கு வாய்ப்பு குறைவு. ஆந்திரா பகுதி நோக்கி செல்ல சாதகமான சூழல் உள்ளது. இது அடுத்தடுத்து வலுப்பெற்று புயலாக மாறுமா என்பது பற்றி நாளை மறுநாள் தாழ்வு பகுதி உருவான பிறகு தான் கணிக்க முடியும்.
இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் மிதமான மழையும் தமிழக தெற்கு கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை மழைக்கு வாய்ப்பு குறைவு. அடுத்த 2 நாட்களுக்குப் பிறகுதான் மழைக்கான வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.