வங்கக்கடலில் இன்று (திங்கட்கிழமை) உருவாகும் அக்வான்' புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்து வருகிறது.
இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தப்பகுதி வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று அதிகாலை 5.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இது தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில், போர்ட் பிளேருக்கு மேற்கு-தென் மேற்கே சுமார் 700 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 860 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்துக்கு தெற்கு-தென்கிழக்கே 1,040 கி.மீ. தொலைவிலும் மற்றும் கோபால்பூருக்கு (ஒடிசா) தெற்கு-தென்கிழக்கே 1,160 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து, இன்று (திங்கட்கிழமை) தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு-மத்திய வங்கக்கடலில் புயலாக மேலும் வலுவடைய கூடும். நாளை (செவ்வாய்க்கிழமை) மேற்கு-மத்திய வங்கக்க டலில் ‘தீவிர புயலாக' மாறக்கூடும்.
இந்த புயலுக்கு 'அக்வான்' என பெயரிடப்பட்டுள்ளது. இது அடுத்த 2 தினங்களில் மேலும் வலுப்பெற்று வட மேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகரக்கூடும்.
இதேபோல தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் இருந்து மாலத்தீவின் வடக்குப்பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. மேலும் கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக வட கடலோர தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக் கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தொடர்ந்து நாளை சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய வட கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூ டும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.