"தற்போதைய தமிழ்நாடு அரசு அமைவதற்கும், அது தொடர்ந்து நீடிப்பதற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் ஆதரவு கொடுத்துள்ளது. இந்த அரசியல் அடிப்படை கூட தெரியாமல் இடதுசாரி மாணவர் அமைப்புகளுக்கு எதிராகச் சுற்றறிக்கை அனுப்பிய தலைமைச் செயலாளர் மற்றும் வட்டாட்சியர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் ஆவேசமாக முழங்கினார்.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் எம். சாய்குமார் ஐஏஎஸ் அவர்களின் சித்தாந்த சாய்மானத்தைக் கண்டித்தும், அவரைப் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வலியுறுத்தியும் சென்னை சைதாப்பேட்டையில் இன்று சிபிஎம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாங்கள் என்ன தடை செய்யப்பட்ட அமைப்பா?
ஆர்ப்பாட்டத்தில் பேசிய சண்முகம், "அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மாணவர் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அப்படி இருக்கும்போது, இடதுசாரி மற்றும் கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்புகளை மட்டும் குறிவைத்து சுற்றறிக்கையில் முடக்க நினைப்பது ஏன்? நாங்கள் ஒன்றும் ஜனநாயகத்திற்கு விரோதமான அமைப்போ அல்லது தடை செய்யப்பட்ட அமைப்போ அல்ல.
கம்யூனிஸ்ட் கட்சிகள் சுதந்திரத்திற்கு முன்பும், தற்போதும் பல்வேறு தடைகளைச் சந்தித்த வரலாறு கொண்டது. அதிகாரிகளுக்கு உத்தரவு போடத் தெரியும் என்றால், அதை மதிக்க வேண்டுமா அல்லது மிதிக்க வேண்டுமா என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம்.
அதிகாரிகள் முதலில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றைப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்" என்று எச்சரித்தார்.
ஜனநாயகத்திற்கு எதிராகச் செயல்படுவது மாணவர் அமைப்புகள் அல்ல, மாறாகக் காவல்துறையினர்தான் என்று சண்முகம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். "எங்கள் மாணவர்கள் பொதுநலன் கருதி, மாணவர்களின் நலனுக்காக மட்டுமே போராட்டங்களை நடத்துகிறார்கள்.
அதைத் தடுப்பதற்கு அதிகாரிகளுக்கு எந்த உரிமையும், அதிகாரமும் இல்லை. சட்டமன்றத்தில் உண்மைக்கு மாறாக அமைச்சர் செங்கோட்டையன் சொல்வது உண்மையா அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர் சொல்வது உண்மையா என்பதை அரசு தெளிவுபடுத்தி, பொய் சொல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
தலைமைச் செயலாளர் எம். சாய்குமார் ஐஏஎஸ் இந்த அரசால் நேரடியாக இங்கு நியமிக்கப்பட்டவர் அல்ல, அவர் தேர்தல் ஆணையத்தின் மூலம் நியமிக்கப்பட்டவர் என்பதைச் சுட்டிக்காட்டிய சண்முகம், "உயர் கல்வித்துறை ஆணையருக்கு விளக்கம் கேட்டு நேற்று மாலை நோட்டீஸ் அனுப்பிய அரசு, அதேபோல் தலைமைச் செயலாளர் சாய்குமாருக்கும் முறைப்படி நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும்.
நீங்கள் யாரை வேண்டுமானாலும் புதிய தலைமைச் செயலாளராகக் கொண்டு வாருங்கள், ஆனால் சாய்குமார் அந்தப் பதவியில் நீடிக்கக் கூடாது என்பது மட்டுமே எங்களின் ஒற்றை இலக்கு" என்றார்.
தவறு செய்த குஜிலியம்பாறை வட்டாட்சியர் மற்றும் தலைமைச் செயலாளரின் வாய்மொழி உத்தரவைக் கேட்டு, உயர் கல்வித்துறை செயலாளர் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பிய சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை இன்னும் முழுமையாகத் திரும்பப் பெறப்படவில்லை என்று சண்முகம் குற்றம் சாட்டினார்.
"காவல்துறை கமிஷனர் போட்ட உத்தரவு மட்டுமே திரும்பப் பெறப்பட்டுள்ளது; மற்றபடி பல்கலைக்கழகங்களுக்குச் சென்ற சுற்றறிக்கைகள் அப்படியேதான் உள்ளன. அரசாங்கம் இதில் முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.
மிக முக்கியமான அரசியல் கேள்வியாக, "தற்போது தமிழ்நாட்டில் அரசிடம் அதிகாரிகள் கட்டுப்பட்டு இருக்கிறார்களா? அல்லது அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு அரசு இயங்குகிறதா? இதற்கு மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள்தான் உரிய பதிலை அளிக்க வேண்டும்" என்று சண்முகம் வலியுறுத்தினார்.
மேலும், "இடதுசாரிகளின் ஆதரவோடு தான் இந்த அரசு நீடிக்கிறது. எனவே, இத்தகைய அதிகாரிகளை வைத்துக்கொண்டு நீங்கள் ஆட்சி நடத்தப்போகிறீர்களா அல்லது இடதுசாரிகளை வைத்து ஆட்சியைத் தொடரப்போகிறீர்களா? இந்த நிர்வாகக் குளறுபடிகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, இப்பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்பட வேண்டும்" என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
மாணவர் போராட்டங்களுக்குத் தடை விதிக்கும் வகையில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கைக்குப் பல்வேறு தரப்பிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, காவல்துறை தரப்பில் உத்தரவுகள் வாபஸ் பெறப்பட்டாலும், பல்கலைக்கழக உத்தரவுகள் முழுமையாகத் திரும்பப் பெறப்படவில்லை எனக் கூறி சிபிஎம் தனது போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.