பண்ருட்டி சுற்றுவட்டாரத்தில் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் கடலூர் சாலை, ராஜாஜி சாலை, கும்பகோணம்சாலை, உள்ளிட்ட முக்கிய சாலைகளிலும், தெருக்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக பகல் நேரங்களில் கடும் வெயிலும், மாலை, இரவு நேரங்களில் கனமழையும் கொட்டி வருகிறது.
நேற்று காலையும் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் வெயில் சுட்டெரித்தது. மாலையில் காலநிலை அப்படியே மாறியது. வானில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது.
சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. 1 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த மழையால் கடலூரில் உள்ள முக்கிய சாலைகளான சிதம்பரம் சாலை, திருவந்திபுரம் செல்லும் சாலை உள்ளிட்ட பல சாலைகளிலும் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அவ்வழியாக சென்ற வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன.
பள்ளி மற்றும் அலுவலகங்கள் முடியும் நேரத்தில் கொட்டிய மழையால் மாணவர்களும், வேலை முடிந்து வீடு திரும்புவோரும் சிரமம் அடைந்தனர். சிலர் வாகனங்களில் மழையில் நனைந்தபடியே சென்றதையும், சிலர் மழைக்கு ஆங்காங்கே ஒதுங்கி நின்றதையும் காண முடிந்தது. இதுதவிர தாழ்வான இடங்களிலும் மழை நீர் தேங்கியது.
பண்ருட்டி சுற்றுவட்டாரத்தில் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் கடலூர் சாலை, ராஜாஜி சாலை, கும்பகோணம்சாலை, உள்ளிட்ட முக்கிய சாலைகளிலும், தெருக்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. லிங்கா ரெட்டிபாளையம் படைவீட்டம்மன் கோவில் தெருவிலும் தண்ணீர் தேங்கி நின்றது. வடிகால் தூர்வாரப்படாததால் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டது.
மாறாக தெருக்களிலும், சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சில தெருக்களில் மழைநீர் வடிந்து செல்ல முடியாமல் தேங்கியது. இதனால் 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொது மக்கள் பெரிதும் அவதியடைந்தனர். வீடுகளுக்குள் புகுந்த நீரை பொதுமக்கள் வாளி உள்ளிட்டவற்றை கொண்டு வெளியேற்றினர்.
சாலைகளிலும் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். விருத்தசாலம் பகுதி யிலும் கனமழைபெய்தது. இந்த மழை காரணமாக விருத்தாசலம் மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்கியது. இதனால் ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகள், அவர்களது உறவினர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். இதேபோன்று மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான காட்டு மன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், மங்கலம்பேட்டை, வடலூர், நெய்வேலி, சேத்தியாதோப்பு, சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.