தமிழ்நாட்டில் கிரிப்டோகரன்சி வர்த்தகம் மற்றும் பல அடுக்கு சந்தைப்படுத்தல் பெயரில் நடைபெற்ற பல கோடி ரூபாய் நிதி மோசடி வழக்கில், முதலீடு செய்தவர்களின் கடுமையான நெருக்கடிக்கு ஆளான ராஜா என்ற 25 வயது வாலிபர் திண்டுக்கல் மாவட்டத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை ஆகிய தென் மாவட்டங்களில் கடந்த 7 மாதங்களாக 'எஃப்.க்யூ.எல் இன்வெஸ்ட்மென்ட் டிரேடிங்', 'எஃப்.க்யூ.எல் எக்ஸ்சேஞ்ச் செயலி' மற்றும் 'வி.ஜி இன்வெஸ்ட்மென்ட் குரூப் சிண்டிகேட்' ஆகிய அமைப்புகள் இயங்கி வந்துள்ளன. இதில் முதலீடு செய்தால் தினமும் அதிகபட்ச லாபம் கிடைக்கும் என்றும், 40 முதல் 45 நாட்களுக்குள் முதலீட்டுத் தொகை அப்படியே இரட்டிப்பாகும் என்றும் உள்ளூர் முகவர்கள் மூலம் மக்களுக்கு ஆசைவார்த்தை காட்டப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் இருந்து ரொக்கம், கூகுள் பே மற்றும் யுபிஐ மூலமாகப் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பெறப்பட்ட நிதியில் ஒரு பகுதி 'டெதர்' எனப்படும் கிரிப்டோகரன்சியாக மாற்றப்பட்டு, சந்தேகத்திற்குரிய எஃப்.க்யூ.எல் டிஜிட்டல் வாலட்களில் வரவு வைக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்குப் பிறகு முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தைத் திரும்பப் பெற முயன்றபோது, செயலி மூலம் பணத்தை எடுக்க முடியாமல் முடங்கியது. கூடுதல் பணம் செலுத்தினால்தான் கணக்கை இயக்க முடியும் எனக் கூறிய நிறுவனத்தினர், திடீரென செயலியை முற்றிலுமாக முடக்கிவிட்டு தலைமறைவாகினர்.
இந்தத் திட்டத்தை நம்பி தனது பகுதி மக்களை பெருமளவில் முதலீடு செய்ய தூண்டியவர் ராஜா நிதி நிறுவனம் ஏமாற்றியதை அறிந்த முதலீட்டாளர்கள், தங்களது பணத்தை மீட்டுத் தருமாறு ராஜாவின் வீட்டைச் சூழ்ந்து கொண்டு தொடர்ந்து கடும் நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். முதலீட்டாளர்களின் தொந்தரவைத் தாங்க முடியாமலும், பணத்தைத் திரும்பத் தர வழியில்லாமலும் மன உலைச்சலுக்கு ஆளான ராஜா, தனது வீட்டிலேயே உயிரை மாய்த்துக் கொண்டார். அவர் தற்கொலை செய்துகொண்ட பிறகும், அவரிடம் கொடுத்த பணம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அவரது வீட்டின் முன் திரண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களில் திரண்டு புகார்களை அளித்து வருகின்றனர். இதுவரை சுமார் ரூ.25 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள், 'பைனான்ஸ்' வாலட்கள் மற்றும் சர்வதேச அளவிலான தொடர்புகள் இந்த மோசடியில் இருப்பதால், வழக்கு விசாரணையை தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு காவல்துறை தலைவர் டாக்டர் மகேஷ் குமார் அகர்வால் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
இவ்வழக்கு தொடர்பாக மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, முதன்மை அமைப்பாளர் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட முக்கிய நபர் அமெரிக்காவில் இருந்து அண்மையில் இந்தியா திரும்பியவர் என்பது தெரியவந்துள்ளது. குற்றவாளிகளுக்குச் சொந்தமான 13 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதோடு, கிரிப்டோ வாலட்களை முடக்கும் நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.