முதலை புகுந்து ஒருவரை கடித்த சம்பவம் கோப்பாடி கிராம மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி அருகே உள்ள கோப்பாடி கிராமத்தின் வழியாக செல்லும் ராஜன் வாய்க்காலில் இருந்து சுமார் 8 அடி நீளமும், 300 கிலோ எடையும் கொண்ட ராட்சத முதலை ஒன்று, இன்று அதிகாலை 3 மணி யளவில் குடியிருப்புக்குள் புகுந்தது.
இதனையடுத்து அதிகாலை நேரத்தில் தெருநாய்கள் தொடர்ந்து குரைக்கும் சத்தம் கேட்டு, அப்பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (44) என்பவர் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது, இருட்டில் பதுங்கியிருந்த முதலை அவரை திடீரென கடித்தது.
இதில் ராஜேந்திரனின் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், காயமடைந்த ராஜேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித்திரிந்த முதலையை பிடிக்க வனத்துறையினர் காலை 8 மணி வரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, அச்சமடைந்த பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், நீண்ட போராட்டத்திற்கு பிறகு அந்த ராட்சத முதலையை பாதுகாப்பாக மீட்டனர். அதிகாலை நேரத்தில் முதலை புகுந்து ஒருவரை கடித்த சம்பவம் கோப்பாடி கிராம மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, ராஜன் வாய்க்கால் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முதலைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.