மக்கள் அதிகாரத்தின் குறியீடாக உள்ள முதலமைச்சர், அமைச்சர்கள் தான் அதிகாரிகளை வழிநடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறி உள்ளார்.
சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் 9-ந்தேதி தவெக கூட்டணி கட்சிகள் கூட்டம் நடக்கிறது.
த.வெ.க. மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களுமான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் நேற்று தங்கள் கூட்டணி கட்சி தலைவர்களையும், நிர்வாகிகளையும் நேரில் சந்தித்தனர்.
அதன்படி, சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்று மாநில செயலாளர்கள் வீரபாண்டியன் மற்றும் சண்முகத்தை தனித்தனியாக சந்தித்து பேசினார்கள்.
த.வெ.க. ஆதரவு கட்சிகளின் முதல் ஆலோசனை கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு பங்கேற்காத நிலையில், 2-வது கூட்டத்தில் பங்கேற்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் தி.நகரில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தவெகவின் நல்லாட்சி, நல்ல திட்டங்களை வரவேற்று ஆதரிப்போம்.
* அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பியது தொடர்பாக அமைச்சர்கள் அளித்த விளக்கத்தை ஏற்கவில்லை.
* மக்கள் அதிகாரத்தின் குறியீடாக உள்ள முதலமைச்சர், அமைச்சர்கள் தான் அதிகாரிகளை வழிநடத்த வேண்டும்.
* தமிழ்நாட்டில் தலைகீழாக உள்ளது, அதிகாரிகள் வழி நடத்துகிறார்கள்.
* தவெக கூட்டணியில் நாங்கள் இல்லை.
* தவெகவை வெளியில் இருந்தே ஆதரிப்போம், கூட்டணியில் நாங்கள் இடம்பெறவில்லை என மீண்டும் அவர் திட்டவட்டமாக கூறினார்.