தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகளை (DPR), போதுமான மக்கள் தொகை இல்லை மற்றும் பயண நேரம் குறைய வாய்ப்பில்லை எனக் கூறி ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மீண்டும் நிராகரித்துத் திருப்பி அனுப்பியுள்ளது.
ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இரு நகரங்களின் வேகமான வளர்ச்சி மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்தும் அளவிற்கு மக்கள் தொகை இல்லை என்று கூறி மதுரை ,கோவை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு மீண்டும் அனுமதி தர மறுத்துள்ளது.
2017 மெட்ரோ ரெயில் கொள்கையின் குறைந்தபட்ச விதிமுறையான 20 லட்சம் மக்கள் தொகை இருக்கவேண்டும் என்பதை காரணமாக சுட்டிக் காட்டி, சுமார் 15.8 லட்சம் மக்கள் தொகை கொண்ட கோயம்புத்தூர், சுமார் 15 லட்சம் மக்கள் தொகை கொண்ட மதுரை ஆகியவற்றுக்கான மெட்ரோ திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
ஆனால், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், ஏறக்குறைய கோவை மற்றும் மதுரைக்கு சமமான மக்கள் தொகையைக் கொண்ட ஆக்ரா,போபால்,பாட்னா போன்ற வட இந்திய நகரங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களுக்கு இந்த அனுமதி மறுத்திருப்பது என்பது ஒன்றிய அரசின் பாரபட்ச போக்காகும். இது கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டுக்கு எதிரான இத்தகைய போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.
உடனடியாக கோவை,மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என ,ஒன்றிய பாஜக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு இத்திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி மீண்டும் விண்ணப்பித்துள்ள நிலையில், ஒன்றிய அரசு எவ்வித அரசியலும் செய்யாமல் கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகள் தரப்பில் இருந்தும் கோரிக்கை வலுத்து வருகிறது.