தமிழக செய்திகள்

Ramzan பண்டிகையையொட்டி பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் ரூ.6 கோடிக்கு மாடுகள் விற்பனை

ரம்ஜான் பண்டிகையையொட்டி மாடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.

மாலை மலர்

பொள்ளாச்சி:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டின் ஒரு பகுதியில் மாட்டுசந்தை செயல்பட்டு வருகிறது.

வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இந்த மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம்.

இந்த சந்தைக்கு பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் அதிகளவிலான மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். கடந்த மாத தொடக்கத்தில் மாடுகள் வரத்து ஓரளவு இருந்ததுடன், கேரள வியாபாரிகள் வருகையும் அதிகரிப்பால் மாடுகள் கூடுதல் விலைக்கு விற்பனையானது.

அதன்பின்பு கடந்த 2-வது வாரத்தில் இருந்து புனிதவெள்ளி நோன்பு மற்றும் ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப்படுவதால் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவாக இருந்தது.

நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் மாட்டுசந்தை கூடியது. பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்தும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் சந்தைக்கு விற்பனைக்கு வந்திருந்தன.

22-ந்தேதி ரம்ஜான் பண்டிகை வருவதால் நேற்று சந்தையில் விற்பனை விறு,விறுப்பாக நடந்தது. வியாபாரிகளும் அதிகளவில் வந்திருந்து மாடுகளை வாங்கி சென்றனர். இதனால் நேற்று ஒரே நாளில் பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் ரூ.6 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக மாட்டு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாட்டு வியாபாரிகள் கூறியதாவது:-

பொள்ளாச்சி சந்தைக்கு கடந்த வாரம் 1500 மாடுகள் வந்த நிலையில் நேற்று 3 ஆயிரம் மாடுகள் விற்பனைக்கு வந்தது. வியாபாரிகளும் அதிகளவில் வந்திருந்து மாடுகளை வாங்கி சென்றனர். கடந்த வாரம் ரூ.2 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்ற நிலையில், ரம்ஜான் பண்டிகையையொட்டி மாடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இதனால் நேற்று ஒரே நாளில் ரூ.6 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.

காங்கயம் காளை ரூ.85 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் வரையும், நாட்டு பசு ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும், நாட்டு எருமை ரூ.75 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரையும், மொரா ரூ.85 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் வரையும் விலைபோனது.

இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்கின்றனர். இதனால் வியாபாரிகள் அவதிப்படுகிறார்கள். கேரளத்தில் இருந்து சந்தைக்கு மாடு வாங்குவதற்கு வரும் வியாபாரிகள் பணமாக தான் கொண்டு வருவார்கள்.

நகையை அடகு வைத்து, வட்டிக்கு பணத்தை வாங்கி சந்தைக்கு வருகின்றனர். சந்தைக்கு வரும் வியாபாரிகளிடம் பணத்தை பறிமுதல் செய்வதால், மாடுகளை வாங்க முடியாமல் திரும்பி செல்லும் நிலை உள்ளது. வட்டிக்கு வாங்கி வரும் பணத்திற்கு வியாபாரிகள் எப்படி கணக்கு காட்ட முடியும். எனவே மாடுகளை வாங்க சந்தைக்கு வரும் வியாபாரிகளிடம் பணத்தை பறிமுதல் செய்யக்கூடாது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.