தமிழக செய்திகள்

இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்ட 9 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆக.6 வரை சிறை - நீதிமன்றம் உத்தரவு!

மன்னார் கடற்பகுதியின் வடக்குப்பதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் கடற்பகுதியின் வடக்குப் பகுதியில் மீன்பிடித்தபோது சர்வதேச கடல் எல்லைக் கோட்டை மீறியதாகக் கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒன்பது மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று (ஜூலை.22) கைது செய்தது.

இந்நிலையில் இந்த 9 பேருக்கும் ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி வரை சிறைதண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று காலை ராமேஸ்வரத்திலிருந்து 3,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள், 400-க்கும் மேற்பட்ட இயந்திரப் படகுகளில் கடலுக்குச் சென்றனர்.

இதில், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்பவருக்கு சொந்தமான படகு ஒன்று, மன்னாருக்கு வடக்கே உள்ள கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ​​இலங்கை கடற்படை ரோந்துப் படையினர் படகை வழிமறித்து, அதில் இருந்த 9 மீனவர்களையும் கைது செய்தனர். அந்தப் படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மன்னாரில் உள்ள இலங்கை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கைப்பற்றப்பட்ட படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்பிடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்று இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த 9 மீனவர்களுக்கு ஆகஸ்ட் வரை சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.