நேற்று நாட்டின் 80 வது சுதந்திர தினம் நாடு முழவதும் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் விஜய் கொடியேற்றினார்.
மாவட்டந்தோறும் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில் அரசு பணிகளிலும், பொது சேவைகளிலும் சிறந்த பணியாற்றியவர்களுக்கு சிறந்த பணிக்கான விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கபட்டன.
அந்த வகையில் ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று சுதந்திர தின விழாவில் சிறந்த பணிக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நகராட்சி தலைவர் கார்மேகம், நகராட்சி பொறுப்பு ஆணையர் சுகுமாறன் ஆகியோர் சிறந்த பணிக்கான சான்றிதழ்களை நகராட்சி ஊழியர்களுக்கு வழங்கினர்.
இதில் நகராட்சியின் வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் என்பவருக்கும் சிறந்த பணிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஆய்வாளர் கார்த்திகேயன் கணக்கில் வராத பணத்தை வைத்திருந்த வழக்கு ராமநாதபுரம் லஞ்ச ஊழல் ஒழிப்பு துறையினரால் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு சிறந்த பணியாளர் விருது வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 3ஆம் தேதி லஞ்ச ஊழல் ஒழிப்பு துறை டி.எஸ்.பி ராமச்சந்திரன் தலைமையில் ராமநாதபுரம் நகராட்சியில் நடந்த சோதனையில் கணக்கில் வராத 3 லட்சத்து 60 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கார்த்திகேயன் வங்கி கணக்கில் கடந்த 3 ஆண்டுகளில் ஜி பே மூலம் சுமார் 25 லட்ச ரூபாய் பண பறிமாற்றம் நடந்திருப்பதும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து முறைகேடான வழியில் பணம் பரிமாற்றம் நடந்ததாக கார்த்திகேயன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணை நடந்து வரும் நிலையில் கார்த்திகேயனுக்கு சிறந்த பணிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் கண்டனங்களை குவித்த நிலையில் கார்த்திகேயனுக்கு வழங்கப்பட்ட சான்றிதழை திரும்ப பெற்றுவிட்டதாக நகராட்சி பொறுப்பு ஆணையர் சுகுமாரன் தெரிவித்துள்ளார்.