தமிழக செய்திகள்

ஊழலற்ற ஆட்சி - தமிழ்நாட்டின் கடன்சுமையை குறைக்க தவெக அரசின் 6 முன்மொழிவுகள்!

கடன்சுமையை குறைக்க, வருவாயைப் பெருக்க ஊழலை ஒழித்தாலே பெரும் மாற்றம் நிகழும் என அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் நிதியமைச்சர் மரிய வில்சன், மாநிலத்தின் நிதி நிலைமை மற்றும் கடன் சுமை குறித்த வெள்ளை அறிக்கையை இன்று மாலை தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.

அதன்படி தமிழ்நாட்டின் தற்போதைய மொத்தக் கடன்சுமை ரூ.13.18 லட்சம் கோடி ரூபாய். நேரடிக்கடன் ரூ.10 லட்சம் கோடி. வருவாய் பற்றாக்குறை ரூ.78, 324 கோடி. தனிநபர் கடன் ரூ. 1,28,934 ஆக உள்ளது.

இந்த கடன்சுமையை குறைக்க, வருவாயைப் பெருக்க தற்போதைய அரசு 6 வழிகளை முன்மொழிந்துள்ளது. அவை,

1. ஊழலற்ற நிர்வாகத்தின் மூலம் வருவாய் இழப்புகளை சரிசெய்தல்

வணிக வரிகள் (ஜிஎஸ்டி), முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவு, ஆயத்தீர்வை மற்றும் கனிமவளம் ஆகியவற்றில் உள்ள அமைப்பு ரீதியான ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேட்டினால் கணிசமான வருவாய் இழக்கப்பட்டுள்ளது.

ஊழலற்ற நிர்வாகம் மூலம் நடப்பு ஆண்டில் 20,000 கோடி ரூபாய் வரை கூடுதல் நிதி வரவை ஏற்படுத்தலாம் என்று கணிப்பு. நிதி இழப்புகளை சரிசெய்தாலே சொந்த வரி ஈட்டும் திறன் பெருமளவு மேம்படும். கூடுதல் வருவாய் புதிய திட்டங்களைச் செயல்படுத்த வழிவகை செய்யும்.

2. அரசு கொள்முதலின் செலவைக் குறைத்தல்

பொதுக் கொள்முதல் மற்றும் ஒப்பந்தப் புள்ளிகளில் ஏற்படும் நிதி இழப்புகளை குறைப்பதன் மூலம், பெருமளவிலான கூடுதல் நிதியைப் பெறலாம். மேம்பட்ட ஒப்பந்த மேலாண்மை, போட்டித்தன்மை வாய்ந்த ஒப்பந்தப்புள்ளி கோரல் மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகியவை செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் கூடுதல் மதிப்பைப் பெற வழிவகை செய்யும்.

3. பொதுத்துறை நிறுவன சீர்திருத்தம் -கட்டமைப்பு சார்ந்தது. மானியம் அல்ல

மின்சாரம்: நிலையான கட்டண முறை, செயல்பாட்டுத் திறன்.

மாநிலப் போக்குவரத்து கழகங்கள்: வழித்தட இயங்குத் திறன், பயணக் கட்டணம் அல்லாத வருவாய்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்: கொள்முதல் சீர்திருத்தம், குறித்த நேரத்தில் மானியங்களை விடுவித்தல், கட்டமைப்பு சீர்திருத்தம், கடனளவு மற்றும் நிலுவை உத்தரவாதங்களைக் குறைக்க வழிவகை செய்யும்.

4. தற்போதுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி வருவாய் திரட்டல்

சந்தை மதிப்புடன் வழிகாட்டுதல் மதிப்பைச் சீரமைத்தல் (முத்திரைத் தாள் கட்டணம்). விரிவான ஆயத்தீர்வை உரிமக் கட்டமைப்பு.

கனிமவளங்கள்: நிர்வாகத்தை நவீனமயமாக்குதல். இழப்பு ஏற்படும் வழிகளுக்கு தீர்வு காணுதல். முழுமையாக அரசின் அதிகார வரம்பிற்குள் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளுதல். புதிய வரிகளுக்கான தேவையில்லை. குடிமக்களுக்குக் கூடுதல் வரிச்சுமை இல்லை.

5. செலவினத் தரம் - நுகர்வை விட மூலதனம்

வருவாய் செலவினங்களிலிருந்து மூலதனச் செலவினங்களுக்கு படிப்படியாக மறு சமநிலைப்படுத்துதல். 2036 ஆம் ஆண்டிற்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய தனியார் முதலீட்டை ஈர்க்கும் உட்கட்டமைப்பை உருவாக்குவதில் மூலதனச் செலவினம் மேற்கொள்ளப்படும்.

6. நேர்மையான, நம்பகமான வரவு-செலவுத் திட்டமிடல்

தலைமை கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரால் சுட்டிக்காட்டப்பட்ட வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டிற்கும், இறுதிக் கணக்குகளுக்கும் இடையிலான வேறுபாட்டைக் குறைக்கவும், முதலீட்டாளர்கள், தரமதிப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் குடிமக்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்க்கவும், வெளிப்படையான நிதிநிலை அறிக்கையானது தேவைப்படுகிறது. நம்பிக்கையே நிதிச் சொத்தாகும்.

SCROLL FOR NEXT