ஏ.சி. பஸ் நிறுத்தம் 
தமிழக செய்திகள்

சென்னையில் 11 இடங்களில் ஏ.சி. பஸ் நிறுத்தம்- மாநகராட்சி தகவல்

மாநகராட்சி கமிஷனர் சமீரன், சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ஆகியோர் முன்னிலையில் பங்களிப்பாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

பெரு நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் சென்னையில் 11 இடங்களில் ஏ.சி. பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட இருக்கிறது.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் பயணிகளின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் உரிய பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய ஏ.சி. பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

ஏ.சி. பஸ் நிறுத்தங்கள்

இந்த நிலையில், பெரு நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் சென்னையில் 11 இடங்களில் ஏ.சி. பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி கமிஷனர் சமீரன், சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ஆகியோர் முன்னிலையில் பங்களிப்பாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

சென்னை டி.எம்.எஸ். அண்ணாசாலை, மயிலாப்பூர் பஸ் நிறுத்தம், வடபழனி ஜவஹர்லால் நேரு சாலை, வேளச்சேரி விஜயநகர் பஸ் முனையம், வடபழனி பஸ் நிறுத்தம் அருகில் (2 இடங்கள்), சின்னமலை, ஆற்காடு சாலை, ஆலந்தூர் மெட்ரோ, எழும்பூர் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ஏ.சி. பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட இருக்கிறது.

இந்த பஸ் நிறுத்தங்களில், கண்காணிப்பு கேமராக்கள், வைபை வசதி, சாய்வுதளப் பாதை, பஸ் வழித்தடத் தகவல்கள், மின்விளக்கு வசதி, பாதுகாப்பான கண்ணாடி, சார்ஜிங் வசதி உள்ளிட்டவை அமைக்கப்பட இருப்பதாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.