சேலம்:
நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களிலிருந்து தொழிற்சாலைகளுக்குத் தேவையான அனைத்து சரக்குகள், பெட்ரோலியப் பொருள்களைப் பாதுகாப்பாகவும், விரைவாகவும் எடுத்துச் செல்வது 80 சதவீதத்துக்கும் மேல், லாரிகள் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது.
நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை அளிக்கும் துறையாக இருப்பதால், பல லட்சம் குடும்பங்கள் இத்தொழிலை நம்பி வாழ்கின்றன.
சமீப காலமாகவே லாரி தொழில் கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாக லாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்ல 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் கி.மீ., வரை பயணிக்க வேண்டியுள்ளது. இதற்காக, குறைந்தபட்சம், 1,700 லிட்டர் டீசல் அடிப்பதுடன், 30 ஆயிரம் ரூபாய் செலவுகளுக்கு வைத்திருக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.
மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் கடன் தவணை கட்ட முடியாமல் 50 ஆயிரம் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே கொரோனா 3-வது அலை வேகமாக பரவுவதால் இனி வரும் நாட்களில் லோடு கிடைக்காது என்பதால் 25 சதவீத லாரிகளைதான் இயக்க முடியும் என லாரி உரிமையாளர்கள் புலம்பி வருகிறார்கள்.
இது குறித்து மாநில லாரி உரிமையாளர் சம்மேளன பொருளாளர் தன்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் இயக்கப்படும், 4.50 லட்சம் லாரிகளில் கொரோனா முதல் அலை தொடங்கிய 2019-ல் லோடு கிடைக்காமல் 2.50 லட்சம் லாரிகள் 8 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டன.
இதனால் நிதி நிறுவனங்கள், வங்கிகளில் வாகனங்களுக்கு பெற்ற கடனுக்கு தவணை தொகை செலுத்த முடியாக நிலை ஏற்பட்டது. தற்போது ரிசர்வ் வங்கி 50 நாள் தவணை செலுத்தாமல் இருந்தால் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க அனுமதித்துள்ளது.
முதல் ஊரடங்கின்போது தவணை செலுத்த 6 மாத அவகாசம் வழங்கிய போதும், வட்டியுடன் செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டது. 2-ம் அலை கொரோனா ஊரடங்கில் நிதி நிறுவனங்கள், வங்கிகள் ஏற்கனவே உள்ள கடனின் மீது 20 சதவீதம் கூடுதல் கடன் வழங்கி தொழிலை காக்க உதவியாக இருந்தது. ஆனாலும் டீசல், டயர் உள்பட உதிரிபாக விலை 20 சதவீத உயர்வு, சுங்க கட்டணம், காப்பீடு தொகை, மத்திய மாநில அரசுகளின் வரி உயர்வால் லாரி உரிமையாளர்கள் நிதி நெருக்கடியில் சிக்கினர். தேவைக்கு அதிகமான லாரிகளால் வாடகையையும் உயர்த்த முடியவில்லை.
லோடு கிடைக்காமல் நிறுத்தியதால் வருமானமின்றி உரிய காலத்தில் தவணை தொகை செலுத்த முடியவில்லை. தற்போது 2 லட்சம் லாரிகள் லோடு கிடைக்காமல் நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள லாரிகளில் 1.5 லட்சம் லாரி உரிமையாளர்கள் வங்கி, நிதி நிறுவனஙகளில் தவணை தொகை செலுத்த முடியாமல் தவிக்கிறார்கள்.
2019-ல் தொடங்கி தற்போது வரை 50 ஆயிரம் லாரிகள் நிதி நிறுவனங்கள், வங்கிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 5 சதவீத லாரிகளை உரிமையாளர்களே ஜப்தி நடவடிக்கைக்கு பயந்து தாமாக முன் வந்து ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் 3-வது அலையால் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் தொழிலை பாதிப்பை ஏற்படுத்தும், அதனால் மத்திய அரசு முதல் கொரோனாவின்போது தவணை தொகை செலுத்த கால அவகாசம் வழங்கிய தவணைகளுக்கு வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், கொரோனா முடிவுக்கு வரும் வரை மத்திய, மாநில அரசுகள் லாரிகளுக்கு அனைத்து வரிகளையும் ரத்து செய்ய வேண்டும்.
மத்திய அரசு சுங்கசாவடிகளில் லாரிகளுக்குரிய வசூலை ஓராண்டு நிறுத்தி வைக்க வேண்டும், கொரோனா கால கட்டத்தில் செலுத்தப்படாத தவணை தொகைக்கு 2 ஆண்டு அவகாசம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக அரசும், டீசல் மீதான வரியை அண்டை மாநிலங்களை போன்று குறைக்க வேண்டும், இனிவரும் நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகும்போது லோடு கிடைக்காது என்பதால் 25 சதவீத லாரிகளே இயங்கும் நிலை உள்ளது. மேலும் அதனை நம்பி உள்ள பல லட்சம் தொழிலாளர்களும் வேலை இழக்கும் நிலை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.