மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்பேட்டை தூய பிரான்சிஸ் பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் காலை 10 மணியளவில் அடையாள அட்டை இல்லாமலேயே பலரை வாக்களிக்க அனுமதிப்பதாக பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரண்டு கட்சியினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் பா.ஜ.க. வேட்பாளர் டாக்டர் தமிழிசை விரைந்து வந்தார். அப்போது பா.ஜ.க. ஒழிக, தி.மு.க. ஒழிக என்று இரு கட்சியினரும் கோஷமிட்டதால் கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது. உடனே துணை போலீஸ் கமிஷனர் தலைமையில் கூடுதல் போலீசார் விரைந்து சென்று சமாதானம் செய்தார்கள். அப்போது வரிசையில் அடையாள அட்டை இல்லாமல் காத்திருந்த இரண்டு பேரை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். அப்போது பயங்கரதள்ளு முள்ளு ஏற்பட்டது. சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு நிலைமை சீரானது.
இதுபற்றி டாக்டர் தமிழிசை கூறும்போது, வாக்காளர்கள் என்ற பெயரில் வரிசையில் நின்ற படி தி.மு.க.வுக்கு வாக்களிக்க கூறி கொண்டிருந்தார்கள். அடையாள அட்டை இல்லாமலே சிலரை வாக்களிக்கவும் அனுமதித்து இருக்கிறார்கள். நானே அங்கு நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து கொடுத்தேன். அராஜகத்தால் ஒரு போதும் வெற்றி பெற முடியாது. ஜனநாயகத்தில் எனக்கு நம்பிக்கை உள்ளது என்றார்.