சென்னை:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார். உடல் நலக்குறைவால் உயிரிழந்த அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
விஜயகாந்த் மரணம் அடைந்து ஒரு மாதத்தை கடந்துவிட்ட நிலையிலும் அவரது நினைவிடத்தில் தினமும் பொதுமக்களும் தே.மு.தி.க. தொண்டர்களும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
குறிப்பாக வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பொதுமக்கள் தே.மு.தி.க. அலுவலகத்திற்கு சென்று விலை உயர்ந்த மாலைகளை வாங்கி வைத்து விஜயகாந்த் நினைவிடத்தில் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
நினைவிடத்தில் விஜயகாந்த் புகைப்படம் மலர் தூவி அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அங்கு வருபவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. இப்படி அஞ்சலி செலுத்த வரும் பொது மக்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு அதனை தங்களது முகநூல் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுவதையும் வழக்கமாகக் கொண்டு உள்ளனர்.
இதன் மூலம் விஜயகாந்த் உயிரிழந்த பிறகும் அவரது நினைவை போற்றும் வகையில் பொதுமக்கள் அவருக்கு தொடர்ச்சியாக மரியாதை செய்து வருவது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக தே.மு.தி.க. நிர்வாகி ஒருவர் கூறும்போது, "எந்த தலைவருக்கும் இல்லாத அளவுக்கு உயிரிழந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் தொடர்ச்சியாக பொதுமக்கள் நேரில் வந்து விஜயாந்த்துக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இது எங்களுக்கு நெகழ்ச்சியாகவே உள்ளது" என்று தெரிவித்தார்.
விஜயகாந்தை பொருத்தவரையில் எல்லோருக்கும் உதவும் எண்ணம் கொண்டவராகவும் தன்னை தேடி வந்தவர்களை சாப்பாடு போட்டு அனுப்பும் பழக்கம் உள்ளவராகவே இருந்து வந்துள்ளார். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் செய்துள்ளார். இது போன்ற நல்ல உள்ளம் கொண்டவராக அவர் திகழ்ந்ததன் காரணமாகவே விஜயகாந்த் மீது பொதுமக்கள் அளவு கடந்த அன்பு வைத்திருப்பதாகவும் அதுதான் தற்போது வெளிப்பட்டு வருவதாகவும் தே.மு.தி.க. நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.