தொகுதி மறுவரையறைக்கு யார் ஆதரவு அளிக்கிறார்களோ அவர்கள் தமிழ்நாட்டிற்கு எட்டப்பர்களாக இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம், மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கடற்கரை விடுதியில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த முகாமின் நிறைவு நாளான இன்று ராகுல் காந்தி பங்கேற்று, மாவட்டத் தலைவர்களிடம் கட்சியின் எதிர்கால அரசியல் திட்டங்கள், அமைப்பு வலுப்படுத்தல் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி பேசியதாவது:-
தொகுதி மறுவரையறை என்பது தமிழக மக்களிடம் இருந்து அதிகாரத்தை பறிப்பதாக உள்ளது. இது பாரதிய ஜனதா கட்சியின் சதியாக உள்ளது.
தமிழ்நாட்டு வரலாற்றில் எட்டப்பர் என்ற பாத்திரம் ஒன்று உள்ளது. எட்டப்பர் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகத்தை விளைவிக்கும் ஒருவராக குறிப்பிடப்படுகிறது.
தொகுதி மறுவரையறைக்கு யார் ஆதரவு அளித்தாலும், அவர்கள் தமிழ்நாட்டிற்கு துரோகம் விளைவிப்பவர்களாகவே இருக்கிறார்கள்.
தொகுதி மறுவரையறையை ஆதரிப்பது என்பது தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கும் துரோகம் இழைப்பதற்கு பாரதிய ஜனதா கட்சியை அனுமதிப்பதாக உள்ளது.
இந்த செயல்களில் ஈடுபடுபவர்கள் 21ஆம் நூற்றாண்டின் எட்டப்பர்களாக இருக்கிறார்கள்.
தொகுதி மறுவரையறைக்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழர்களும் மற்றும் தனிப்பெரும் கட்சியாக உள்ள தமிழகத்தை சேர்ந்த கட்சிகளும் தொகுதி மறுவரையறையை மக்களவையில் தோற்கடிக்க வேண்டும்.
இவ்வாறு செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி கூறினார்.