அனைத்து கட்சிகளின் நிலைப்பாடு என்னவோ அது தான் அரசின், தவெகவின் நிலைப்பாடு என்றார்.
தமிழக சட்டசபையில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில்,
பேரவைத் தலைவர் அவர்களே... ஒரு சிறு விளக்கம். நேற்று தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாடு நடந்தது. சில ஊடகங்கள், சில பத்திரிகைகள், சில கட்சிகள் தொகுதி மறுவரையறை பற்றி ஒரு தவறான பிரசாரத்தையும், கண்ணோட்டத்தையும் உருவாக்கப்பட்டது. முதலமைச்சர் கொண்டு வந்த தொகுதி மறுவரையறை தீர்மானம் இங்கு இருக்கக்கூடிய உறுப்பினர்களுடன் சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசின் சார்பாக எங்களுடைய நன்றியை தெரிவித்தோம்.
அதில் நேற்று பரப்பப்பட்ட போலி பிரசாரங்கள் தவறானது. தொகுதி மறுவரையறை தொடர்பாக எந்த விவாதமும் நேற்று நடந்த முதல்வர்கள் மாநாட்டில் வரவில்லை. நம்முடைய தொகுதி மறுவரையறை கொள்கை சட்டமன்றத்தில் தீர்மானத்தில் என்ன நிறைவேற்றினோமோ அதில் அரசும் முதலமைச்சரும் உறுதியாக இருக்கிறார். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது தான் த.வெ.க.வின் நிலைப்பாடு. 25 ஆண்டுகள் 543 சீட் என்ற எண்ணிக்கையில் மாற்றம் செய்யக்கூடாது என்பதில் த.வெ.க. உறுதியாக இருப்பதை அவையில் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
இதனை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், தென்மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டில் 543 எம்பி சீட்டை மாற்றக்கூடாது என முதல்வர் எங்கும் கூறவில்லை என்பதை இந்த அவையில் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
தொடர்ந்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், அனைத்து கட்சிகளின் நிலைப்பாடு என்னவோ அது தான் அரசின், தவெகவின் நிலைப்பாடு என்றார்.
இதையடுத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, 7.18 என்ற விகிதத்தில் தமிழகத்திற்கான எம்பிக்கள் எண்ணிக்கையில் மாற்றம் கூடாது என்பதே அதிமுக நிலைப்பாடு என்றார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், தொகுதி மறுவரையறை வேண்டாம் என்று நகலை எதிர்த்த திமுக, எதிர்க்கட்சியாக மாறிவிட்டதால் நிலைப்பாட்டை மாற்றியது. வாஜ்பாய் கொண்டு வந்ததை போல் 25 ஆண்டுகள் நீட்டிக்க சிறப்பு சட்டம் கொண்டு வரவேண்டும் என்றார்.
இதையடுத்து பேசிய பாஜக எம்எல்ஏ போஜராஜன், 50% உயர்வு என வரம் போது தமிழக எம்பிக்கள் எண்ணிக்கை 59 ஆக உயரும், தொகுதி மறுவரையறை தமிழகத்துக்கு நல்லது. தமிழக எம்பிக்களின் எண்ணிக்கை உயர்த்தும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
பாமக எம்எல்ஏ கணேஷ்குமார் பேசுகையில், விகிதாச்சார அடிப்படையில் கூடுதல் எம்பிக்கள் தான் கிடைப்பார்கள், தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் வராது. முதலில் Fair Delimittation என கூறிய காங்கிரஸ் தற்போது ஏன் No Delimitation என சொல்வது ஏன்? 7.18 என்ற விகிதம் குறையாமல் இருந்தால் தொகுதி மறுவரையறையை ஆதரிப்பதாக த.வெ.க.வும் கூறியது. முந்தைய திமுக ஆட்சியில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தவெக பொதுச்செயலர் பங்கேற்றார். திமுக தலைமையில் நடந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் த.வெ.கவும் கையெழுத்திட்டது. தவெகவும், காங்கிரசும் Fair Delimitation என கூறிவிட்டு இப்போது நிலைப்பாட்டை மாற்றுகின்றன. உள்துறை அமைச்சர் அமித்ஷா உரிய விளக்கம் கொடுத்துள்ளார் என்றார்.
அமைச்சர் வன்னி அரசு பேசுகையில், மக்களவையில் ஒன்று பேசும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவைக்கு வெளியே ஒன்று பேசுகிறார். 543 இடங்களில் தென் மாநிலங்களுக்கான 129 எம்பி என்ற எண்ணிக்கை 195 என உயரும் என அமித்ஷா கூறியுள்ளார். தென்மாநில எம்பிக்கள் எண்ணிக்கை தொடர்பான அமித்ஷாவின் கருத்து தொகுதி மறுவரையறை மசோதாவில் இல்லை. பாமக உறுப்பினர் ராமதாஸை காப்பாற்றுவதை விட மோடியே காப்பாற்றுவதில் தீவிரம் காட்டுகிறார். அமித்ஷா மாற்றி மாற்றி பேசுவதாக ஆங்கில நாளிதழில் வந்த கட்டுரையை ஆதாரமாக வைத்து குற்றம்சாட்டினார்.
இவ்வாறு சட்டசபையில் விவாதம் நடைபெற்றது.