த.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்கு மேகாலயா மாநிலத்தில் அடிக்கடி அரங்கேறுவது போன்ற ஆட்சி கவிழ்ப்பு சதி திட்டத்தில் ஈடுபட்டதால் கைதானவர்கள் அதற்கு ‘மேகாலயா புராஜெக்ட்’ என்று பெயர் வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
ஊத்தங்கரை த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜாவை தொடர்பு கொண்டு ஆட்சியை கவிழ்ப்பதற்காக ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த யூடியூபர் திருநாவுக்கரசு என்பவர் மேலும் சிலருடன் சேர்ந்து இளையராஜா எம்.எல்.ஏ.வை அணுகி சட்டமன்ற வாக்கெடுப்பில் த.வெ.க எடுக்கும் நிலைப்பாட்டை மீறி அவர்கள் சொல்லும்படி வாக்களிக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் ரூ.35 கோடி லஞ்சமாக வழங்குவதாகவும். அவ்வாறு செயல்பட மறுத்ததால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில்தான் போலீசார் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த வழக்கில் திருநாவுக்கரசோடு தொடர்பில் இருந்தவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் திருநாவுக்கரசு மேலும் சிலருடன் சேர்ந்து கூட்டுச்சதி செய்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
“மேகாலயா பிராஜெக்ட்” என்ற பெயரிட்டு 15 எம்.எல்.ஏ.க்களை விலை கொடுத்து வாங்குவதற்கு இவர்கள் காய் நகர்த்தி இருப்பதும் தெரிய வந்து உள்ளதாக போலீசார் கூறி உள்ளனர். திருநாவுக்கரசுடன் தொடர்பில் இருந்த அனைவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திருநாவுக்கரசின் செல்போன் தொடர்புகள் அவரது வாட்ஸ்அப் உரையாடல்கள் ஆகியவற்றின் அடிப்படையாக வைத்து சம்பந்தப்பட்ட அனைவரையும் விசாரணை வளையத்துக்கும் போலீசார் கொண்டு வந்துள்ளனர்.
த. வெ. க. ஆட்சியை கவிழ்ப்பதற்காக திருநாவுக்கரசு படிப்படியாக மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கைகளையும் தன்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களிடம் செல்போன் மூலமாக தெரிவித்து வந்துள்ளார்.
வாட்ஸ் அப் வழியாகவும் தகவல்களை பரிமாறி இருக்கிறார். இது போன்ற தகவல்கள் கிடைக்கப் பெற்றதும் அவரது நட்பு வட்டத்தில் இருந்த பலர் அதனை ஊக்கப்படுத்தும் வகையில் பதிலும் அனுப்பி இருக்கிறார்கள்.
இதையெல்லாம் மையமாக வைத்து தான் இந்த வழக்கில் மேலும் யார் யாருக்கு தொடர்புள்ளது என்பது பற்றிய விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதன் மூலம் த.வெ.க. எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசிய வழக்கில் திருநாவுக்கரசரோடு நெருங்கிய தொடர்பில் இருந்த மேலும் சிலரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவருடன் வாட்ஸ்அப் மூலமாக தகவல்களை பரிமாறியவர்களுக்கு சம்மன் அனுப்பி அவர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்து இருக்கிறார்கள்.
இதன் முடிவில் இந்த வழக்கில் தொடர்புடைய அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் பலரும் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
த.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்கு மேகாலயா மாநிலத்தில் அடிக்கடி அரங்கேறுவது போன்ற ஆட்சி கவிழ்ப்பு சதி திட்டத்தில் ஈடுபட்டதால் கைதானவர்கள் அதற்கு ‘மேகாலயா புராஜெக்ட்’ என்று பெயர் வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.