மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், 31-வது தென் மண்டல முதலமைச்சர்கள் மாநாடு வரும் ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் இந்த முக்கிய ஆலோசனைக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த மாநாட்டில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களும், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சர், அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் பங்கேற்பார்கள்.
மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த தென் மண்டல கவுன்சில் கூட்டம் நடத்தப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவிற்கும் இடையே காவிரி விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அதுதொடர்பாக பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில் மற்ற மாநிலங்களுக்குள்ளான ஒருங்கிணைப்புகள், வளர்ச்சித் திட்டங்கள், பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்படும். மேலும் தற்போது பேசுபொருளாக உள்ள நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான விவகாரங்களும் இதில் பேசப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.