மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், இவரது மகள் மோனிஷா (வயது 15). இவர் மாமல்லபுரம் அடுத்துள்ள பூஞ்சேரி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை 4.30 மணி முதல் 5.15 மணி வரை நடந்த ஆங்கிலம் சிறப்பு வகுப்பில் பயின்றுவிட்டு அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் தனது வீட்டுக்கு செல்வதற்காக தாம்பரத்தில் இருந்து மாமல்லபுரம் செல்லும் அரசு பஸ்சில் ஏற முயன்றார். பஸ்சில் நிற்க கூட இடம் இல்லாத நிலையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாணவி மோனிஷா படிக்கட்டில் நின்று கொண்டு நெரிசலில் சிக்கி தவித்தார்.
பயணிகள் ஏறும் முன்பே பஸ் திடீரென இயக்கப்பட்டு எலக்ட்ரானிக் கதவு மூடப்பட்டது. பஸ்சில் கூட்டம் முண்டியடித்தால் எரிச்சலடைந்த அந்த பஸ் கண்டக்டர் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த மோனிஷாவை கன்னத்தில் பளார் பளார் என 3 முறை தாக்கி தனது கோபத்தை அந்த மாணவியின் மீது காட்டியுள்ளார்.
காது வலியால் துடித்த மோனிஷா தனது பெற்றோரிடம் கண்டக்டர் தன் கன்னத்தில் அறைந்த தகவலை தெரிவித்தார். பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், தனது பெற்றோருடன் மாமல்லபுரம் போலீஸ் நிலையம் வந்த மாணவி மோனிஷா தன்னை தாக்கிய கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் செய்தார். இதையடுத்து மாமல்லபுரம் போலீசார் தாம்பரம் போக்குவரத்து பணிமனைக்கு தகவல் அனுப்பி சம்பந்தப்பட்ட கண்டக்டர் மீது விசாரணை நடத்தி வருகின்றனர்.