காவல்துறையின் கண்ணியத்தைச் சிதைத்து, காவல் நிலையத்தை ‘ரீல்ஸ்’ களமாக்கிய தவெக அமைச்சருக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட தக்கோலம் காவல் நிலையத்திற்குள் நள்ளிரவில் ‘ஆய்வு’ என்ற பெயரில் புகுந்த கூட்டுறவுத் துறை அமைச்சர் வ. காந்திராஜ், பணியில் இருந்த சீருடைப் பணியாளர்களையும், குறிப்பாக ஒரு பெண் காவலரையும் மிரட்டும் விதமாக பேசி, அதனைத் திரைப்படப் பாடலுடன் ‘ரீல்ஸ்’ வீடியோவாக வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அமைச்சரின் இந்த செயலுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
கூட்டுறவுத் துறையை நிர்வகிக்க வேண்டிய அமைச்சர், நள்ளிரவில் காவல் நிலையத்திற்குள் சென்று அதிகாரத் தோரணையில் பேசியிருப்பது அப்பட்டமான அதிகாரத் துஷ்பிரயோகமாகும்.
தவெக ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என அனைவரும் தங்களது கடமைகளை விட ‘ரீல்ஸ்’ வெளியிடுவதில்தான் கவனம் செலுத்தி வருகின்றனர்; மொத்தத்தில், இந்த ஆட்சியே ரீல்ஸில்தான் நடைபெறுகிறது. காவல்துறையின் மாண்பையும் பெண் காவலரின் சுயமரியாதையையும் சினிமாப் பாடல் பின்னணியில் கேலிக்கூத்தாக்குவதுதான் தவெக அரசு கூறும் நிர்வாகத் திறமையா?
முதலமைச்சர் விஜய் அவர்களே, மக்களுக்கான ஆட்சியை நடத்தப் போகிறீர்களா, இல்லை ‘ரீல்ஸ்’ அரசியலைத் தொடரப் போகிறீர்களா? நள்ளிரவில் காவல்துறையின் மாண்பைக் குலைத்து, பெண் காவலரின் சுயமரியாதையைப் பாதிக்கும் வகையில் நடந்துகொண்ட அமைச்சர் வ. காந்திராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்?
உடனடியாக அந்த வீடியோவை நீக்கவும், அமைச்சர் பகிரங்க மன்னிப்பு கேட்கவும் உத்தரவிடுவதோடு, இனி அமைச்சர்கள் அதிகார வரம்பை மீறாமல் செயல்படுவதைத் தாங்கள் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
என்று தெரிவித்துள்ளார்