தமிழக செய்திகள்

மூதாட்டியை விசில் சின்னத்திற்கு வாக்களிக்கக் கூறியதாக புகார் - தாராபுரம் தேர்தல் அலுவலர் தங்கமணி மாற்றம்!

தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

தாராபுரம் தொகுதி கொளிஞ்சிவாடி வாக்குச்சாவடியில், மூதாட்டியிடம் விசில் சின்னத்திற்கு வாக்களிக்கக் கூறியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தேர்தல் அலுவலர் தங்கமணி மாற்றப்பட்டுள்ளார்.

இடைத்தேர்தல்

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் திடீர் ராஜினாமா காரணமாக, இன்று (அக்.6) தமிழ்நாட்டில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

தேர்தல் களத்தில் ஆளும் தவெக, எதிர்க்கட்சி திமுக, அதிமுக, நாதக, இடதுசாரிகள் என ஐந்துமுனை போட்டி நிலவுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தேர்தல் அலுவலர் மாற்றம்

இந்நிலையில் தாராபுரம் தொகுதியின் தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டிருந்த தங்கமணி என்பவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தாராபுரம் தொகுதி கொளிஞ்சிவாடி வாக்குச்சாவடியில், வாக்களிக்க வந்த மூதாட்டி ஒருவரிடம் தவெகவின் விசில் சின்னத்திற்கு ஓட்டுப் போட சொல்லி அவர் கூறியதாக புகார் எழுந்தது.

இதனால் மாற்றுக்கட்சியினர் வாக்குப்பதிவை நிறுத்தக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு வாக்குப்பதிவு தடைப்பட்டிருந்தது. தொடர்ந்து தாராபுரம் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் இந்தப் புகாரைத் தொடர்ந்து அலுவலர் தங்கமணியை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. தங்கமணிக்கு பதிலாக புதிய தேர்தல் அலுவலராக ராஜம்மாள் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT