மண் கடத்தல் தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகன் எ.வ.குமரன் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மலப்பம்பாடி ஏரியில் இருந்து சட்டவிரோதமாக ரூ.8 கோடி மதிப்பிற்கு மண் திருடப்பட்டதாக அறப்போர் இயக்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் மலப்பம்பாடியில் திமுக வடக்கு மண்டல இளைஞர் அணி மாநாடு கலைஞர் திடலில் நடைபெற்றது. இந்த மாநாட்டை ஏற்பாடு செய்யும் பொறுப்பில் இருந்த எ.வ.வேலு தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து அதிகளவு மண் எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சுரங்க விதிகளின்படி, பொதுப் பயன்பாட்டுக்காக ஏரிகளில் 1 மீட்டருக்கு மேல் மண் எடுக்க அனுமதி இல்லை . ஆனால், மலப்பம்பாடி ஏரியின் 12 ஏக்கர் பரப்பளவில் சுமார் 10 முதல் 23 அடி (3 முதல் 7 மீட்டர்) ஆழம் வரை மண் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
ஏரியின் சுமார் 8 ஏக்கர் பரப்பிலிருந்து ஏறத்தாழ 45,72,058 கன அடி ஏரிப்படுகை மணல் கொண்டு செல்லப்பட்டதாகவும், இதனால் அரசுக்கு ரூ.8,22,97,044 (8.22 கோடி ரூபாய்) வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
வருவாய்த்துறை, மாவட்ட ஆட்சியரகம், மாநகராட்சி மற்றும் புவியியல்-சுரங்கத்துறை அதிகாரிகள் எவ்விதத் தடுப்பு நடவடிக்கையும் எடுக்காமல், தங்களது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர் என முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.