மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், துணை சபாநாயகர் ரவிசங்கர் தாக்கியதாகவும், மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. அரசு தரப்பின் பதில் கேட்டு நீதிபதி வழக்கை 1-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த கார்த்திக்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
பட்டியல் சமூகத்தை சேர்ந்த நான் துறையூர் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறேன். கடந்த மாதம் துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான ரவிசங்கரிடம் மக்கள் சார்ந்த கோரிக்கை மனு அளிக்க சென்றேன். அப்போது துணை சபாநாயகர் யார் நீ என கேட்டு என்னை உருட்டு கட்டையால் தாக்கி காயம் ஏற்படுத்தினார். இதில் எனது 3 சவரன் நகையையும் காணவில்லை.
காயம் அடைந்ததற்கு சிகிச்சை பெற மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்தேன். அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் என்னிடம் விசாரித்த போது, துணை சபாநாயகர் தாக்கியதாக தெரிவித்தேன். ஆனால் அடையாளம் தெரியாத நபர் தாக்கியதால் காயம் ஏற்பட்டதாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும் மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மருத்துவமனையில் இருந்த என்னை கட்டாயப்படுத்தி துணை சபாநாயகர் இல்லத்திற்கு அழைத்து சென்று, என்னை யாரும் தாக்கவில்லை என மறுப்பு வீடியோ பதிய கட்டாயப்படுத்தினார். அதற்கு நான் மறுத்தபோது, துணை சபாநாயகர் என்னை தகாத வார்த்தைகளால் பேசி, பொய் வழக்கு போடுவதாக மிரட்டினார்.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே துறையூர் எம்.எல்.ஏவும், துணை சபாநாயகருமான ரவிசங்கர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன்பு இன்று விசரனைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரரின் இந்த வழக்கு குறித்து பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என்றார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கை வருகிற 1-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.