தமிழக செய்திகள்

திருமாவளவனை வரவேற்க திரண்ட வி.சி.க.வினர்- போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு

வி.சி.க.வினர் கதவை தள்ளி கொண்டு கல்லூரிக்குள் நுழைந்தனர்.

போலீசார் கல்லூரிக்குள் நுழைந்த வி.சி.க.வினரை அங்கிருந்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், வி.சி.க.வினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

கடலூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தொல். திருமாவளவன் எம்.பி. பங்கேற்று பட்டங்களை வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

பட்டமளிப்பு விழா

அதன்படி விழாவில் பங்கேற்பதற்காக தொல்.திருமாவளவன் எம்.பி. இன்று காலை கடலூருக்கு வந்தார். அவரை வரவேற்பதற்காக காலை முதலே ஏராளமான வி.சி.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அந்த கல்லூரியின் முன்பு குவிந்திருந்தனர். பாதுகாப்பு கருதி போலீசாரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், கல்லூரியின் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் கார் வந்ததும், வி.சி.க தொண்டர்கள் அவரது காரை சூழ்ந்து கொண்டனர்.

தொண்டர்கள் திரண்டனர்

இதனை தொடர்ந்து அவர் காரை திறந்து வெளியில் வந்து அங்கு திரண்டிருந்த தனது கட்சி தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.

அதன்பின்னர் திருமாவளவனின் கார் கல்லூரி வளாகத்திற்குள் சென்றது. அப்போது அங்கு திரண்டிருந்த வி.சி.க தொண்டர்களும், அவருடன் உள்ளே செல்ல முயன்றனர். கல்லூரி பட்டமளிப்பு விழாவுக்கு மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால் போலீசார் அவர்களை உள்ளே விட மறுத்து கதவை மூடினர்.

தள்ளுமுள்ளு

ஆனால் வி.சி.க.வினர் கதவை தள்ளி கொண்டு கல்லூரிக்குள் நுழைந்தனர். அப்போது போலீசார் சிலர் கீழே விழுந்தனர். அவர்களை உடன் இருந்த போலீசார் மீட்டனர். உள்ளே நுழைந்த வி.சி.க.வினர், திருமாவளவனை நோக்கி கல்லூரி வளாகத்திற்குள் ஓடினர். இதையடுத்து போலீசார் கல்லூரிக்குள் நுழைந்த வி.சி.க.வினரை அங்கிருந்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், வி.சி.க.வினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர். அதனை தொடர்ந்து பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT