தமிழக செய்திகள்

கொளத்தூரில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்ததால் பரபரப்பு

மெட்ரோ ரெயில் பணி நடைபெறுவதால் மண் அரிப்பு ஏற்பட்டு சாலையில் பள்ளம் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சாலை பள்ளத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கொளத்தூர், செந்தில் நகர் 2-வது மெயின் ரோடு பகுதியில் ஆட்டோ ஸ்டாண்டு உள்ளது. இங்கு நேற்று இரவு 7 மணியளவில் கொளத்தூர் பாரதிதாசன் நகரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு அருகில் உள்ள மளிகைக் கடையில் தண்ணீர் குடிக்க சென்றார்.

ஆட்டோ பள்ளத்தில் சிக்கியது

அந்த நேரத்தில் திடீரென ஆட்டோ நிறுத்தப்பட்ட இடம் அருகே பள்ளம் ஏற்பட்டது. இதில் அந்த ஆட்டோ பள்ளத்தில் சிக்கியது. சாலை உடைந்து சுமார் 5 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டு இருந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ராஜமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அருகில் இருந்த மெட்ரோ ரெயில் பணி ஊழியர்கள் விரைந்து வந்து கிரேன் மூலம் ஆட்டோவை மீட்டனர். அப்பகுதியில் மெட்ரோ ரெயில் பணி நடைபெறுவதால் மண் அரிப்பு ஏற்பட்டு சாலையில் பள்ளம் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சாலை பள்ளத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT