ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இந்த ஆண்டு இரண்டாம் சீசனுக்காக சுமார் 5 லட்சம் மலர்ச்செடிகள் கொண்டு மலர்ப்பாத்திகள் அமைக்கப்பட்டன.
மலைகளின் அரசி என அழைக்கப்படும் ஊட்டியில் தற்போது நிலவும் இதமான காலநிலை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. அவ்வப்போது மேகங்கள் சூழ்வதும், மெல்லிய சாரல் மழை பெய்வதும், குளிர்ந்த காற்று வீசுவதுமாக ஊட்டி நகரமே இயற்கையின் அழகிய போர்வைக்குள் மூழ்கியிருப்பது போன்ற ரம்மியமான சூழல் நிலவுகிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தருகின்றனர். அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் பயணிகள் நடமாட்டம் காணப்படுகிறது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் வருபவர்கள் ஊட்டியின் குளிர்ந்த காற்றையும் மலைகளின் பசுமையையும் ரசித்து புகைப்படங்கள் எடுத்து மகிழ்கின்றனர்.
சாரல் மழை பெய்யும் நேரங்களில் குடை மற்றும் குளிர் ஆடைகளுடன் சுற்றுலா பயணிகள் நகரின் முக்கிய சாலைகளில் நடந்து செல்வதும் ஊட்டியின் இரண்டாம் சீசனுக்கே உரிய அழகான காட்சியாக மாறியுள்ளது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இந்த ஆண்டு இரண்டாம் சீசனுக்காக சுமார் 5 லட்சம் மலர்ச்செடிகள் கொண்டு மலர்ப்பாத்திகள் அமைக்கப்பட்டன. தற்போது மலர்கள் பூத்துக்குலுங்கி சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.
மேலும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இரண்டாம் பருவத்திற்காக டேலியா, சால்வியா, இன்கா மேரி கோல்டு, பிரெஞ்ச் மேரிகோல்டு, டெய்சி, காலண்டுலா, ஐரிஸ், பால்சம், சப்பனேரியா, சைக்ளமன், டெல்பினியம், ஜூபின், ஆந்தூரியம் உள்ளிட்ட 70 வகையான மலர்ச் செடிகள் 15,000 மலர் தொட்டிகளில் நடவு செய்து மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும் இத்தாலியன் பூங்காவிலும் மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள 4.5 லட்சம் மலர் செடிகளிலும் மலர்கள் பூத்துள்ளன.
அதேபோல் குன்னூர் சிமஸ் பூங்காவில் ஆண்டுதோறும் பல்வேறு மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்த ஆண்டு இரண்டாம் கட்ட சீசன் இந்த மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை நடைபெற உள்ள நிலையில் 2.50 லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டிருந்தது தற்போது பூத்து குலுங்குகிறது.
இதில் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகளை தாயகமாக கொண்ட பால்சம், சால்வியா, பிளாகஸ், காஸ்மாஸ், ஜின்னியா, பெகோனியா, பேன்சி, டெல்பினியம் போன்ற 75-க்கும் மேற்பட்ட ரக மலர்கள் பூத்துக்குலுங்கி வருகிறது. பூக்களுக்கு இடையில் சுற்றுலா பயணிகள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகையால் பூங்கா தற்போது களை கட்டியுள்ளது. வரும் வாரங்களில் ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக அதிகமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து கண்டுகளிக்க அதிகம் வருவார்கள் என்று தோட்டக்கலைத் துறையினர் எதிர்பார்த்துள்ளனர்.