தமிழக செய்திகள்

அதிக நிறமூட்டிகளை பயன்படுத்தி விற்கப்படும் கலர் அப்பளத்துக்கு தடை- உணவு பாதுகாப்புத்துறை!

நிறமூட்டிகளை பயன்படுத்தி விற்கப்படும் கலர் அப்பளம் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடும்.

பொதுமக்கள் மற்றும் குறிப்பாகக் குழந்தைகளைக் கவரும் வகையில் கவர்ச்சிகரமான பல வண்ணங்களில் (சிவப்பு, மஞ்சள், பச்சை) விற்கப்படும் கலர் அப்பளங்களில் மற்றும் வத்தல்களில், அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிகமாகவும், சில இடங்களில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் தடைசெய்யப்பட்ட தொழிற்சாலை சாயங்கள் பயன்படுத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து உணவுப் பாதுகாப்புத் துறை நடத்திய ஆய்வகச் சோதனைகளில், சேகரிக்கப்பட்ட பெரும்பாலான மாதிரிகள் பாதுகாப்பற்றவை எனத் தெரியவந்துள்ளது.

அதிக நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட இந்த அப்பளம் மற்றும் வத்தல் வகைகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால் கடுமையான உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவர்களும் அதிகாரிகளும் எச்சரிக்கின்றனர். இந்நிலையில், அடிக்கடி கலர் அப்பளம் சாப்பிட்டால் செரிமான பிரச்சனை, சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

முக்கியமாக குழந்தைகள் இந்த கலர் அப்பளத்தை சாப்பிட்டால் அலர்ஜி மற்றும் கவன சிதறல் உண்டாகலாம் எனவும் உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை செய்துள்ளது பாரம்பரியமாக உளுந்து, அரிசி உள்ளிட்டவையில் தயாரிக்க கூடிய அப்பளத்தை வாங்கி சாப்பிடுவது நல்லது.

சந்தைகள், சுற்றுலா தளங்கள் மற்றும் பொருட்காட்சிகள் உள்ளிட்ட இடங்களில் கலர் அப்பளம் விற்பனை செய்ய வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது நிறமூட்டிகளை பயன்படுத்தி விற்கப்படும் கலர் அப்பளம் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடும் என தமிழக உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது .

உறுப்புகள் பாதிப்பு:

நீண்ட நாட்களாக இந்தச் செயற்கை நிறமிகளை உட்கொள்வதால் புற்றுநோய் மற்றும் கட்டிகள் ஏற்படும் அபாயம் கணிசமாக அதிகரிக்கிறது.

இவை செரிமான மண்டலத்தைப் பாதித்து வயிற்றுப் புண் மற்றும் குடல் பாதிப்புகளை உண்டாக்குகின்றன. இந்தத் தரம் குறைந்த சாயங்கள் உடலில் இருந்து எளிதில் வெளியேறாமல் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் தங்கி, அவற்றின் செயல்பாட்டைப் பாதிக்கின்றன.

விதிகளுக்குப் புறம்பாக நிறமூட்டிகள் சேர்த்து அப்பளம் தயாரிக்கும் நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, அவற்றுக்கு அவசரத் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகின்றன. விதிகளை மீறும் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டு லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய அல்லது அதிக அடர் நிறமுள்ள அப்பளங்களைத் தவிர்த்து, இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதே உடலுக்குப் பாதுகாப்பானது.