தமிழக செய்திகள்

தஞ்சையில் விஜய்யை பின்தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

தஞ்சாவூரில் தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்று, விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மாலை மலர்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பரப்புரை மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இம்மாத தொடக்கத்தில் தஞ்சாவூரில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த விஜய் தனி விமானம் மூலம் திருச்சி வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாகத் தஞ்சாவூரை அடைந்தார். அப்போது விஜய்யின் வாகனத்தை ரசிகர்கள் பலரும் இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்தனர்.

இதில் திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் புதுக்குடி அருகே சென்றபோது, திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் ஓட்டிச் சென்ற பைக், பின்னால் வந்தவர்கள் மோதியதில் முன்னால் சென்ற கார் மீது மோதியது.

இதில் விக்னேஷும், பைக்கில் அவருடன் வந்த அவரது நண்பர் அருணும் காயமடைந்தனர். இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த விக்னேஷ் தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இளைஞர் விக்னேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 19 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்தநிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.