தமிழக செய்திகள்

மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை பணி செய்வதை தவிர்க்க வேண்டும்- கலெக்டர் வேண்டுகோள்

வெப்பத்தைத் தாங்கக்கூடிய பயிர் ரகங்களையும், குறுகிய கால ரகங்களையும் சாகுபடி செய்ய வேண்டும்.

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் மாலதி ஹெலன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

எல் நினோ நிகழ்வினால், காலநிலையில் இந்த ஆண்டு அதிக அளவு மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில் கீழ்க்காணும் முன்னெச்சரிக்கை மற்றும் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வறட்சியை எதிர்கொள்ள நுண்ணீர் பாசன முறைகளை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும்.

பயிர்களுக்கு இடையே தகுந்த இடைவெளி மற்றும் கவாத்து முறைகளை மேற்கொண்டு காற்றோட்டத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

மண் ஈரப்பதத்தை பாதுகாக்க மேற்புற வெப்ப நிலையை குறைக்கவும் இயற்கை முறை மூடாக்குகள் (வைக்கோல், கரும்புத் தோகை) ஏற்படுத்த வேண்டும். வானிலை மாற்றங்கள் மற்றும் பருவமழை துவக்கம் குறித்த தகவல்களை ஊடகங்கள் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதிக வெப்ப நேரமான மதியம் 12 மணி முதல் 3 மணி வரையிலானகாலத்தில் வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

வெப்பத்தைத் தாங்கக்கூடிய பயிர் ரகங்களையும், குறுகிய கால ரகங்களையும் சாகுபடி செய்ய வேண்டும்.

பயிர்களின் பூ (ம) காய் பிடிக்கும் பருவங்கள் அதிக வெப்பத்தினால் பாதிக்காத வண்ணம் விதைப்பு தேதியை மாற்றி விதைக்க வேண்டும். வேளாண் காடுகள் வளர்ப்பதன் மூலம் வயல்களுக்கு நிழல் மற்றும் காற்றுத் தடுப்புகளை உருவாக்கி வெப்ப அலைகளில் இருந்து பாதுகாக்க வேண்டும்.

பிரதிபலிக்கும் கூரைகள் (ம) 30-70 சதவீதம் நிழல் தரக்கூடிய நிழல் அமைப்புகள் ஆகியவற்றைக் கொண்டு கால்நடைக் கொட்டகைகளை மேம்படுத்த வேண்டும்.

நெல், பயிறு வகைகள், கரும்பு உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.