24 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம் 
தமிழக செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் 24 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம்- கலெக்டர் அறிவிப்பு

சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது.

விநாயகர்சதுர்த்தியை முன்னிட்டு வழிபாட்டுக்கு வைக்கப்படும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் மற்றும் சிலைகள் கரைக்கப்படும் 24 இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கவிதா வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் போது, விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசுகட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின் படி (www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எனவே, பொதுமக்கள் களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.

சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொமாக்கோல் பொருட்களை பயன்படுத்த கூடாது. நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம்/ எண்ணெய் வண்ணப் பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது, மாற்றாக சுற்றுச்சூழலுக்குகந்த நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள,

சித்தேரி, ஊத்துக்கோட்டை ஏரி, கொசஸ்தலையாறு, காக்களூர் ஏரி, கூவம் ஏரி, பன்றவேடு குளம், கரிம்பேடு குளம், வண்ணாங்குளம், தாமரைக்குளம், விளாகணாம்பூடி, செல்லத்தூர் ஏரி, வீரமங்கலம், பராசக்திநகர் குளம், காந்தி ரோடு ஏரி, நந்தியாறு (திருத்தணி முதல் அரக்கோணம் புதிய புறவழிச்சாலை), கனகம்மாசத்திரம் குளம், திருமழிசை ஏரி, கோளப்பஞ்சேரி ஏரி, அரபாத் ஏரி, விலிஞ்சியவாக்கம் ஏரி, கோவில் பதாகை ஏரி, ஏழுகண் பாலம், பழைய சாத்தான் குப்பம் கடற்கரை, கலங்கரை விளக்கம் கடற்கரை ஆகிய இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின் படி கரைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT