கட்டுமான அனுமதி வழங்க வசூலிக்கப்பட்ட கட்சி நிதி நிறுத்தப்பட்டதால் வீடுகள் விலை குறைய வாய்ப்பு உள்ளது.
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., சார்பிலும், நகர் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி. சார்பிலும், கட்டுமான திட்ட அனுமதிகள் வழங்கப்படுகின்றன. இதில், அடுக்குமாடி திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கும்போது சதுர அடிக்கு ரூ.27 முதல் ரூ.35 வரை கட்சி நிதி என்ற பெயரில், கடந்த காலங்களில் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
கட்டிட அனுமதிக்கான கோப்புகள் அதிகாரிகள் வசம் இருந்தாலும், அதில் உள்ள விபரங்களை பெறும் அரசியல் புள்ளிகள் கட்டுமான நிறுவனங்களை அணுகி கட்சி நிதி கேட்பது உண்டு. இதற்கு உடன்படாத நிறுவனங்களுக்கு, கட்டிட அனுமதி நிறுத்தி வைக்கப்படும். இதில் கட்சிநிதி கொடுப்பதற்கான செலவையும் கட்டுமான நிறுவனங்கள், வீட்டின் விலையில் சேர்த்து, மக்களிடம் வசூலித்து வந்தன. இதனால், வீடுகளின் விலைகள் வெகுவாக உயர்ந்தன.
இந்த நிலையில், கட்டிட அனுமதி வழங்க கட்சி நிதி வசூலிக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசின் முடிவை, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய், இந்திய கட்டுமான வல்லுனர் சங்கத்தின் தென்னக மையம் ஆகியவை வரவேற்றுள்ளன.
இதுகுறித்து கட்டுமான துறையினர் கூறியதாவது:
கட்சி நிதி வசூலிப்பது நிறுத்தப்பட்டதால், கட்டுமான நிறுவனங்களுக்கு செலவு மிச்சமாகி உள்ளது. இதன் பயனை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. புதிதாக அறிவிக்கப்படும் குடியிருப்பு திட்டங்களில், வீடுகள் விலையை சதுரடிக்கு 100 ரூபாய் வரை குறைப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.