ஜாபர் சாதிக் உடன் தி.மு.க. ஆட்சியில் இருந்த முதலமைச்சர் உடன் தொடர்பு என அமைச்சர் கூறியதற்கு தி.மு.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று கோவை மாணவன் கொலை தொடர்பாக தி.மு.க. கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. தீர்மானத்தின் மீது அவை உறுப்பினர்கள் பேசிய பிறகு அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார்.
அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது:-
* இரண்டாமாண்டு பயிலும் அமுதனின் நண்பனுக்கும் 4-ம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையிலான மோதலில் தாக்கி உள்ளனர்.
* அமுதன் இறந்ததை தொடர்ந்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
* அமுதன் கொலை தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
* போதைப்பொருள் தொடர்பாக எந்த தகவலும் இல்லை. பழிவாங்கல் காரணமாகவே கொலை என தெரிய வந்துள்ளது.
* போதைப்பொருள் புகார் தந்தவரின் தகவலை போலீசார் கசிய விட்டது என எந்த நிகழ்வும் நடைபெறவில்லை.
* போதைப்பொருள் குறித்து புகார் அளித்தவரின் தகவலை போலீசார் கசியவிட்டதாக கூறுவதில் உண்மையில்லை.
* போதைப்பொருள் தொடர்பாக புகாரளித்தால் கொலை என சித்தரித்து உண்மையை திசை திருப்ப வேண்டாம்.
* கோவை மாணவன் அமுதன் கொலையில் உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் காவல்துறைக்கு இல்லை.
* கடந்த 5 ஆண்டுகளாக போதைப்பொருள் புழக்கம் தமிழகத்தில் எப்படி இருந்தது என நாம் அறிந்ததே.
* போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் உடன் கடந்த ஆட்சியில் முதலமைச்சரின் குடும்பத்தினரிடம் தொடர்பு என்றார்.
ஜாபர் சாதிக் உடன் தி.மு.க. ஆட்சியில் இருந்த முதலமைச்சர் உடன் தொடர்பு என அமைச்சர் கூறியதற்கு தி.மு.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், ஒரு அமைச்சரே ஐபிஎல் போட்டியின் போது போதைப்பொருள் பயன்படுத்தியது வீடியோவாக வெளியாகி உள்ளது. மாத்திரை நுணுக்கியதாக கதைவிட்ட த.வெ.க. அமைச்சரிடம் காவல்துறை விசாரணை நடத்தியதா?. போதைப்பொருள் கடத்தல் மன்னன் விவகாரத்தில் தி.மு.க. உடனடி நடவடிக்கை எடுத்தது என்றார்.
ஐபிஎல் மேட்ச்சில் த.வெ.க. அமைச்சர் பவுடர் என உதயநிதி ஸ்டாலின் பேசியதும் த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் சட்டசபையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.