கோவை அருகே உள்ள சூலூர் பகுதியில் கடந்த வாரம் 10 வயது சிறுமியை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. பாலியல் அதிர்ச்சி சம்பவத்தில் தொடர்புடைய கார்த்திக் (வயது 34) மற்றும் அவரது நண்பர் மோகன்ராஜ் (31) ஆகிய இருவரைப் போலீஸார் கைது செய்தனர்.
இவர்களில் முக்கிய குற்றவாளியான கார்த்திக் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். அதில் அவருக்கு கை மற்றும் காலில் முறிவு ஏற்பட்டது.
பிறகு கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கார்த்திக், சில நாட்களுக்கு மட்டும் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு கார்த்திக் உணவு சாப்பிடச் சென்றபோது சக கைதிகள் 5 பேரால் சரமாரியாகத் தாக்கப்பட்டார்.
இந்த தாக்குதலில் பலத்த காயம் ஏற்பட்டது. மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கார்த்திக்கைத் தாக்கிய 5 கைதிகள் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் அனைவரும் உடனடியாக வெவ்வேறு மாவட்ட சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதற்காக கைதான 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக போலீசார் கோவை போக்சோ கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
2 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு அவர்கள் மனுவில் கூறி உள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், சிறுமியின் கொலை வழக்கில் கைதான 2 பேரிடம் விசாரணை நடத்தினால் மேற்கொண்டு கூடுதல் தகவல் கிடைக்கும். அது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உதவியாக இருக்கும்.
எனவே கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோர்ட்டின் அனுமதி கிடைத்ததும் அவர்கள் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்துவோம் என்றனர்.