தமிழக செய்திகள்

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் இறுதிகட்ட விசாரணை

104 அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, குற்றவாளியின் டிஎன்ஏ பகுப்பாய்வு உள்ளிட்ட தடயங்கள் குற்றப்பத்திரிக்கையில் தாக்கல் செய்யப்பட்டன.

கோவை சூலூர் சிறுமி கொலை:

கோவை சூலூரில் கடந்த மே மாதம் 21 அன்று, 10 வயது நான்காம் வகுப்பு மாணவி ஒருவர், தனது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டுந்த போது காணாமல் போனார்.

அச்சிறுமியின் குடும்பத்திற்கு நன்கு அறிமுகமான பக்கத்து வீட்டைச் சேர்ந்த கார்த்தி என்பவர் சாக்லேட் வாங்கி தருவதாக ஆசை காட்டி தனது மோட்டார் சைக்கிளில் சிறுமியை கடத்தி சென்றார்.

இதையடுத்து கண்ணம்பாளையம் குளத்தின் வடக்கு கரைக்கு அருகில் உள்ள ஒரு தனியார் நிலத்தில், ஆள்நடமாட்டம் இல்லாத புதர் பகுதியில், அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் அச்சிறுமியின் உடலை அந்த இடத்திலேயே விட்டுச் சென்றார்.

சிறுமியின் பெற்றோர்கள் சூலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், ஏரிக்கரையில் இருந்த அவரின் உடலை போலீசார் மீட்டனர்.

குற்றவாளிகள் கைது:

இதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், கார்த்தி என்ற 35 வயது நபரைக் கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கூட்டாளியான மோகன் என்பவரையும் போலீசார் கைது செய்து, இருவர் மீதும் குண்டர் சட்டம் போட்டனர்.

இந்த வழக்கு விசாரணையில் 104 அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, குற்றவாளியின் டிஎன்ஏ பகுப்பாய்வு மற்றும் செல்போன் நெட்வொர்க் உள்ளிட்ட தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

குற்றப்பத்திரிக்கை தாக்கல்:

இந்நிலையில் குற்றவாளிகள் கைதா 22 நாட்களில் டிஎஸ்பி கரிகல் பரி சங்கர் தலைமையிலான புலனாய்வுக் குழுவினர் 819 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் உள்ள குற்றவாளிகளான கார்த்திக் மற்றும் மோகன் ராஜிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்குவதற்காக இருவரும் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

தொடர்ந்து குற்றப் பத்திரிக்கை நகல்களை இருவரிடமும் வழங்கிய நீதிபதி ஏற்கனவே இருவருக்கும் நாளைவரை நீதிமன்ற காவல் உள்ளதால் வெள்ளிக்கிழமை பிற்பகல் மீண்டும் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.

சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதால், விரைவில் போக்சோ நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.