தமிழக செய்திகள்

கணவருடன் நெருக்கம் காட்டிய பெண்ணே என் தற்கொலைக்கு காரணம்- இளம்பெண் கடிதம்

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தற்கொலை செய்த சரஸ்வதி கடிதம் எழுதி வைத்து விட்டும், செல்போனில் ஆடியோ வெளியிட்டும் இருப்பது தெரியவந்தது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வட்டப்பாறைப்புதூர் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 24). இவர் பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு வாலிபரை திருமணம் செய்து கருத்துவேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். அதன்பின் நாயக்கன்பாளையத்தில் தனது தாயாருடன் வசித்து வந்தார்.

கணவருடன் கருத்து வேறுபாடு

இந்நிலையில் சரஸ்வதி கடந்த 11/2 ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பாளையத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டு அம்சி நகரில் வசித்து வந்தார். இவர்களுக்கு சாய்துருவன் என்ற 4 மாத ஆண் குழந்தை உள்ளது.

கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. இதனால் வேதனை அடைந்த சரஸ்வதி சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

பெண் தற்கொலை

இதுகுறித்து தகவல் அறிந்த அவரது தாயார் மற்றும் குடும்பத்தினர் மயக்க நிலையில் கிடந்த சரஸ்வதியை மீட்டு ஆம்புலன்சு மூலம் பெரியநாயக்கன்பாளையம் தனியார் மருத்துமனையில் சேர்த்தனர்.

பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சரஸ்வதியை பரிசோதித்த டாக்டர்கள், ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே சரஸ்வதி உயிரிழந்து விட்டதாக கூறினர்.

கடிதம் சிக்கியது

இதுபற்றி சரஸ்வதியின் தாயார் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். புகார் மனுவில் கார்த்திக்-சரஸ்வதியும் அடிக்கடி சண்டை போட்டு வந்தனர். எனவே மகள் இறப்பின்மீது சட்டப்படி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தற்கொலை செய்த சரஸ்வதி கடிதம் எழுதி வைத்து விட்டும், செல்போனில் ஆடியோ வெளியிட்டும் இருப்பது தெரியவந்தது.

பெண் மீது புகார்

அந்த கடிதத்தில், என் சாவுக்கு ஒரு பெண்தான் காரணம். அவள் என் கணவருடன் நெருக்கமாக இருந்து உள்ளார். அந்த பெண்ணை விசாரியுங்கள். அதற்கான ஆதாரம் அனைத்தும் என்னுடைய செல்போனில் உள்ளது.

நான் இறந்த பிறகு என் குழந்தையை அம்மாவிடமோ, கணவரிடமோ ஒப்படைக்க வேண்டாம். அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விடுங்கள். என் கணவருடன் நெருங்கி பழகிய பெண்ணுக்கு உரிய தண்டனையை வழங்குங்கள். என் சாவுக்கும் கணவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சரஸ்வதி குறிப்பிடப்பட்டு உள்ளார்.

மேலும் அந்த கடிதத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணின் செல்போன் எண் மற்றும் வாட்ஸ் அப் எண் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT